ஆவணங்களில் முறைகேடு செய்து கார் விற்பனை; இருவர் கைது - சிக்கியது எப்படி..?
திண்டிவனத்தில் ஆவணங்களில் முறைகேடு செய்து கார் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு.
கார் விற்பனை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஆவணங்களில் முறைகேடு செய்து கார் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோயமுத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கார் வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் இவர் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு கார் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது கடலூர் மாவட்டம், சேடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார் மற்றும் கிள்ளி வளவன் ஆகியோர் மூலமாக இனோவா மற்றும் பார்ட்சூனர் ஆகிய இரண்டு கார்களை 13.5 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
ஆவணங்களில் முறைகேடு
பின்பு அந்த கார்களை மற்றொரு நபருக்கு விற்பனை செய்ய முயன்ற போது அந்த கார்களின் மேல் ஏற்கனவே கடன் வாங்கி இருப்பதும், அதனை மறைத்து (NOC) போலி ஆவணங்கள் தயார் செய்து கார்களை விற்பனை செய்திருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த கார்த்திக் மற்றும் அவருடன் தொழில் செய்து வரும் அவரது நண்பர்கள், மீண்டும் தங்களுக்கு ஒரு கார் தேவைப்படுவதாகவும், காரை திண்டிவனம் எடுத்து வந்தால் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரேம்குமார் மற்றும் கிள்ளிவளவன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி வேகனார் கார் ஒன்றை எடுத்துக் கொண்டு திண்டிவனம் வந்த பிரேம் குமார் மற்றும் கிள்ளி வளவன் ஆகிய இருவரும் கார்த்திக்குடன் மற்ற நபர்கள் வந்திருப்பதை கண்டு நாம் செய்த தில்லு முல்லு தெரிந்துதான் பிடிக்க வருவதாக அறிந்து பயந்து அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். கார்த்திக் மற்றும் உடன் வந்தவர்கள் துரத்தியதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை இருவரையும் துரத்தி பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திண்டிவனம் போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் அந்தப் பகுதியில் ஓடியதை பார்த்த பொதுமக்கள் வேறு ஏதேனும் சினிமா சூட்டிங் இருக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என அந்த பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.