ஈசிஆரில் பயங்கர விபத்து... தீப்பற்றி எரிந்த பேருந்து... பைக்கில் வந்த 2 வாலிபர் கருகி உயிரிழந்த சோகம்
மரக்காணம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம்: மரக்காணம் அருகே மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய மகன் கார்த்திக் ராஜா வயது (24) , மற்றும் கார்த்திக் ராஜா நண்பர் ஒரே மோட்டார் பைக்கில் இன்று புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர். இவர்கள் வந்த மோட்டார் பைக்கை கார்த்திக் ராஜாவின் நண்பர் ஒட்டி வந்தார். இவர்கள் மரக்காணம் அருகே மண்டவாய் என்ற இடத்தில் வந்த போது சென்னையில் இருந்து புதுவை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் பைக் பேருந்தின் முன் பக்கத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் சாலையில் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு பேருந்தின் அடியிலேயே மோட்டார் பைக் இழுத்துச் செல்லப்பட்டது. இதுபோல் மோட்டார் பைக் சாலையில் உரசியதால் பைக் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ பேருந்தின் முன் பகுதியிலும் பரவியது. இதனால் உள்ளே இருந்த பயணிகளும் அலறி துடித்தனர். இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மரக்காணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். அப்போது போலீசார் இறந்து கிடந்த ஒரு நபரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஓட்டுநர் உரிமத்தை எடுத்து பார்த்தனர். அதில் அந்த வாலிபர் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. மற்றொரு நபர் உடல் எரிந்த நிலையில் இருந்ததால் முகவரி தெரியவில்லை இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.