திண்டிவனத்தில் காரில் சாராயம் கடத்திய தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் கைது
திண்டிவனத்தில் வீட்டில் சாராயம் தயாரித்து விற்பனை செய்ய காரில் எடுத்து சென்ற தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் காரின் உள்ளே ஏராளமான சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து காரில் வந்தவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் திண்டிவனம் நத்தமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜா என்கிற மரூர் ராஜா என்பதும், இவரது மனைவி ரம்யா திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருவதும் தெரியவந்தது. மேலும் மரூர் ராஜர் தனது வீ்ட்டில் சாராயம் தயாரித்து,
பின்னர் அவற்றை பாக்கெட்டுகளில் அடைத்து திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்து வந்ததும், அது போல் தயாரித்த சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்காக கொண்டு வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து மரூர் ராஜாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளுடன் காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரது வீட்டுக்கு சென்று மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 கேன்களில் 105 லிட்டர் எரி சாராயம், 9 காலி கேன்கள், சாராய பாக்கெட்டுகள் தயாரிக்க பயன்படும் 6 மெஷின்கள், 2 கிலோ பாலித்தீன் பைகள் இருந்ததை கண்டு பிடித்த போலீசார் அவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்