Crime: டூ வீலர் திருடியவரை 3 மாதங்களுக்கு பின்... ‘பொல்லாதவன்’ பட பாணியில் த்ரில்லிங் சம்பவம்
பொல்லாதவன் படபாணியில் டூ வீலர் திருடிய நபரை 3 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடித்து காரில் குண்டுகட்டாக கடத்திய சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது
விழுப்புரம்: விழுப்புரத்தில் பொல்லாதவன் பட பாணியில் தனது இருசக்கரவாகனத்தை திருடிய நபரை மூன்று மாதங்களுக்கு பிறகு கண்டுபிடித்து காரில் குண்டுகட்டாக கடத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கலையூரை சார்ந்த சந்தானகுமார் என்பவரின் இரு சக்கர வாகனம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்ததை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இருசக்கர வாகன திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தான குமார் செஞ்சி காவல் நிலையத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரினை பதிவு செய்த போலீசார் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை பிடிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். சந்தானகுமார் பலமுறை காவல்நிலையத்திற்கு சென்று இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு கூறியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்மாதிரியே இவ்வழக்கினை போலீசார் விசாரனை செய்துள்ளனர்.
இதனையடுத்து சந்தான குமார் தனது இரு சக்கர வாகனத்தை நண்பர்களின் உதவியுடன் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, விழுப்புரம் நகர பகுதியான மகாராஜபுரத்தை சார்ந்த கதிரவன் என்ற இளைஞர் திருடியது தெரியவரவே, இளைஞரிடம் இருசக்கர வாகனத்தை தரும்படி கேட்டபோது இல்லையென கூறி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தானகுமார் தனது நண்பர்களுடன் இணைந்து 3 ஆம் தேதி மகாராஜபுரத்தில் வீட்டின் வாயிலில் நின்றிருந்த கதிரவனை காரில் கடத்தி சென்றுள்ளார். கதிரவனை குண்டு கட்டாக கடத்தி சென்றதை நேரில் கண்ட கதிரவனின் தந்தை குணசேகர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து விழுப்புரம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு செஞ்சியில் சந்தானகுமார், கதிரவன், அன்பரசை கைது செய்தனர்.
இதனையடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்ததில் கதிரவன் தனது நண்பர்களுடன் இணைந்து தொடர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவரவே கதிரவனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இருசக்கரவாகனத்தை கண்டுபிடிக்க குற்றவாளியை கடத்தி சென்ற சந்தானகுமார், அன்பரசு மீது கடத்தல் வழக்கினை போலீசார் பதிவு செய்தனர். பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் தனது இருசக்கரவாகனத்தை கண்டுபிடிப்பது போல இளைஞர் தனது இருசக்கர வாகனத்தை திருடிய நபரை கண்டுபிடித்து குண்டுகட்டாக காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்