(Source: ECI/ABP News/ABP Majha)
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய க்ரைம் செய்திகள் உங்கள் பார்வைக்கு ...!
ஹவுராவில் இருந்து விழுப்புரத்துக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா ஆயில் மற்றும் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
1. சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அருங்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 73). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு கடந்த 26.12.2018 அன்று 6 வயது சிறுமி சாக்லேட் வாங்க சென்றாள். அப்போது நடராஜன், நிறைய சாக்லேட்டுகள் தருகிறேன் என்று கூறி அந்த சிறுமியை கடையின் பின்புறமுள்ள ஒரு அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தார். உடனே சிறுமி, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுபற்றி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் பத்மா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்.
2. ஹவுராவில் இருந்து விழுப்புரத்துக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா ஆயில் மற்றும் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹவுராவில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் ரெயில் என்ஜினுக்கு அடுத்தபடியாக உள்ள பொதுப்பெட்டியில் சந்தேகப்படும்படியாக இருந்த ஒருவரது உடைமைகளை சோதனை செய்தனர். இதில் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஒரு பாட்டிலில் ஒரு லிட்டர் கஞ்சா ஆயிலும், 2 பண்டல்களில் தலா ஒரு கிலோ வீதம் 2 கிலோ கஞ்சாவும் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஒடிசா மாநிலம் கும்பிரிடாவை அடுத்த சிலிமாபோசி பகுதியை சேர்ந்த ரமேஷ்சந்திரகிரியின் மகன் ஷிஸ்ரீகுமார் கிரி (வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஷிஸ்ரீகுமார் கிரியையும் மற்றும் கஞ்சா, ஆயில் ஆகியவற்றை விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, ஷிஸ்ரீகுமார் கிரியிடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஷிஸ்ரீகுமார் கிரி, ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா ஆயிலை ரெயிலில் கடத்திக்கொண்டு புதுச்சேரிக்கு சென்று அங்குள்ள நண்பர் ஒருவரிடமும், அங்கிருந்து கர்நாடகாவுக்கு சென்று மற்றொருவரிடம் கஞ்சா, கஞ்சா ஆயிலை கொடுக்க இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஷிஸ்ரீகுமார்கிரியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் பின்னணியில் வேறு சிலரும் இருக்கக்கூடும் என்பதால் அவர்கள் யார், யார் என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
3. விக்கிரவாண்டி அருகே பாம்பு கடித்து இறந்த பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு
விக்கிரவாண்டி அடுத்த தொரவி கணபதிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மகள் சாருமதி(வயது 16). இவர் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தந்தை பிரகாஷ் இறந்து விட்டதால் தாய் சுகுணா கூலி வேலை செய்து மகளை படிக்க வைத்தார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி வயலுக்கு சென்ற சாருமதியை விஷப் பாம்பு கடித்துவிட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சாருமதி சிகிச்சை பலன் இன்றி நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து தாய் சுகுணா மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதனர். மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவ கல்லூரி முன்பு திரண்டு முறையான சிகிச்சை இல்லாததால் தான் சாருமதி இறந்ததாக கூறி சாலை மறியல் செய்ய முயன்றனர். இதுபற்றிய தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு மருத்துவமனை வளாகத்துக்குள் சென்ற அவர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து பிண அறையை முற்றுகையிட்டனர். உடனே போலீசார் விரைந்து சென்று சாமாதனம் செய்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவியின் உடலை வாங்கி சென்றனர்.
4. திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு ஓராண்டு சிறை
திண்டிவனம் தாலுகா செம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண்ணும், அதே கிராமத்தை சேர்ந்த எட்டியான் மகன் ராமச்சந்திரன் என்பவரும் கடந்த 2013-ம் ஆண்டு பழகி வந்தனர். அப்போது ராமச்சந்திரன் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார். அதன் பிறகு அந்த பெண், ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு திருமணம் செய்ய மறுத்த ராமசந்திரன், அவரது தந்தை எட்டியான், தாய் பரிமளா, சகோதரி புவனேஸ்வரி, உறவினர் துரை ஆகியோர் சேர்ந்து அந்த பெண்ணை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரன், எட்டியான், பரிமளா, துரை, புவனேஸ்வரி ஆகியோரை கைது செய்து இவர்கள் மீது விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ராமச்சந்திரனுக்கு(26) ஓராண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும், மற்ற 4 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி(பொறுப்பு) சாந்தி தீர்ப்பு கூறினார்.
5. வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 5 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா காடகனூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் சக்திவேல்(வயது 18). இவருக்கும், இவரது பக்கத்து வீ்ட்டை சேர்ந்த முனியப்பன் குடும்பத்துக்கும் இட பிரச்சினை காரணமாக முன்விரதம் இருந்து வந்தது. கடந்த 23.6.2012 அன்று முன்விரோதம் காரணமாக சக்திவேலை முனியப்பன், அவரது சகோதரர் ராமச்சந்திரன், இவரது மகன்கள் கலாநிதி, ராமு, ராமச்சந்திரன் மனைவி சவுந்தரி ஆகிய 5 பேரும் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி உருட்டுக்கட்டை மற்றும் கொடுவாளால் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து சக்திவேல், அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் முனியப்பன் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, குற்றம் சாட்டப்பட்ட முனியப்பன் உள்ளிட்ட 5 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
6. நிதி நிறுவனம் நடத்தி ரூ.25 லட்சம் மோசடி பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா சிறுவாடி கிராம மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த செய்யதுஅலி, அழகியமண்டபம் பகுதி ஜெயசசிதரன், எட்வின்சுதாகர், மார்த்தாண்டம் ரமேஷ் உள்ளிட்ட சிலர் எங்களிடம் வந்து தாங்கள் நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிளை அலுவலகங்களுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் நிதி நிறுவனங்களில் இயக்குனர்கள், முக்கிய ஏஜெண்டுகள் என்றும், எங்கள் நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து திட்டங்களில் முதலீடு செய்தால் வங்கிகளை விட அதிக வட்டி தருவதாகவும், முதலீட்டு தொகை எப்போது தேவைப்பட்டாலும் திருப்பித் தருவதாகவும், இந்த தொகையை வீட்டுமனைகளில் முதலீடு செய்வதாகவும் கூறினர். இதை நம்பிய நாங்கள் 50-க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து மாதந்தோறும் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்தினோம். ஆனால் முதிர்வு காலம் முடிந்த பிறகும் அந்நிறுவனத்தினர் நாங்கள் செலுத்திய பணத்தை வட்டியுடன் திருப்பித்தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். நாங்கள் பலமுறை வற்புறுத்தி கேட்டும் அவர்கள் பணத்தை தராததால் நாகர்கோவிலில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்றபோது அவர்கள் அந்நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். எனவே எங்களிடம் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்த அந்நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.