(Source: ECI/ABP News/ABP Majha)
ரயிலில் மலர்ந்த காதல் திருமணம்...மனைவியை துண்டு துண்டாக வெட்டி ரயிலில் கூலாக பயணம் செய்த கணவர்!
பாபநாசம் திரைப்பட பாணியில் தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய எழுத்தாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொதுவாக தம்பதிகளுக்கு இடையே சண்டைகள் வருவது வழக்கமான ஒன்று. அந்த சண்டையில் சில நேரங்களில் கொலை வரைக்கும் சென்றுவிடுகிறது. அந்தவகையில் தற்போது ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் கிட்டதட்ட பாபநாசம்(திர்ஷ்யம்) திரைப்படம் கதை போல உள்ளது. அது என்ன சம்பவம்? எப்படி நிகழ்ந்தது?
உத்தரப்பிரதேச மாநிலம் மீருட் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் நிராலா. இவர் அங்கு எழுத்தாளராக இருந்து வருகிறார். அத்துடன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல தகவல்களை கேட்டு பெற்று வரும் ஆர்வலராகவும் இருந்து வருகிறார். இவர் அடிக்கடி ரயிலில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக லக்னோ மற்றும் அலாகாபாத் ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி ரயிலில் சென்று வந்துள்ளார். அந்தச் சமயத்தில் லக்னோ பகுதியில் உள்ள ஒரு வர்த்தக தொழில் செய்யும் நபரின் குடும்பம் இவருக்கு பழக்கமாகியுள்ளது. அந்த குடும்பத்தில் இருந்த ரூபி குப்தா இவருக்கு பழக்கமாகியுள்ளார். அவருடைய நம்பரை ரயில் பயணத்தின் போது வாங்கி இருவரும் பேச தொடங்கியுள்ளனர்.
நாளைடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் சமீபத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 20 லட்சம் ரூபாய் பணம் தொடர்பாக இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது.
அதைத் தொடர்ந்து சில மணி நேரத்திற்கு பிறகும் இருவருக்கும் இடையே இருந்த மோதல் தீராமால் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீபக் நிராலா தன்னுடைய மனைவி ரூபியை ஒரு இரும்பு கம்பியால் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பலத்த காயம் அடைந்த ரூபி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த தீபகிற்கு ஒரு யோசனை வந்துள்ளது. அவர் தன்னுடைய மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஒரு சாக்கு பையில் போட்டு கொஞ்சம் தொலைவில் உள்ள ஒரு சாக்கடையில் வீசியுள்ளதாக தெரிகிறது.
அதன்பின்னர் திர்ஷ்யம் படம் பாணியில் ஒரு டூர் திட்டம் ரெடி செய்து தீபக் நிராலா தன்னுடைய நண்பர்களுடன் ஆக்ஸ்ட் 23ஆம் தேதி முதல் சுற்றுலா சென்றுள்ளார். அதில் ரிசிகேஷ், ஹரிதுவார் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளார். இறுதியாக லக்னோவிலுள்ள தன்னுடைய மாமியார் வீட்டிற்கும் சென்றுள்ளார். இப்படி செய்தால் தன் மீது எந்தவித சந்தேகமும் வராது என்று நடந்துள்ளார். அதன்பின்னர் தன்னுடைய மனைவியை காணவில்லை என்ற புகாரும் காவல்நிலையத்தில் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல்துறையினர் மூன்று வாரங்களுக்கு பிறகு எழுத்தாளர் தீபக் நிராலா தன்னுடைய மனைவியை கொலை செய்ததை கண்டறிந்துள்ளனர். அதன்பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அத்துடன் அவர் கொலைக்கு பயன்படுத்த ஆயுதங்களையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். தன்னுடைய மனைவியை எழுத்தாளர் ஒருவர் திரைப்பட பாணியில் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: நெல்லையை நடுங்க வைக்கும் பழிக்குப்பழி கொலைகள்- பதற்றம் நீடிப்பதால் 8 மாவட்ட போலீஸ் குவிப்பு!