Crime: தகாத உறவு..! 3 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை - மனைவி மீது கொடூர தாக்குதல்..! பாஜக நிர்வாகியின் கோரமுகம்
UP Crime: மனைவி மீதான சந்தேகம் காரணமாக தான் பெற்ற 3 குழந்தைகளை தந்தையே சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

UP Crime: தகாத உறவு தொடர்பான சந்தேகம் காரணமாக கணவன் நடத்திய தாக்குதலால், மனைவி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
குடும்பத்தின் மீது துப்பாக்கிச் சூடு
உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டதோடு, தான் பெற்றெடுத்த மூன்று குழந்தைகளை கொன்றதாகவும் கைது செய்யப்பட்டார். சகாதேடா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட யோகேஷ் ரோஹில்லா என்பவர், தனது குடும்பத்தினரை சுட்டுக் கொன்றதாக ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்
தனது மனைவி நேஹாவுக்கு திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருப்பதாகவும், பலமுறை முயற்சித்த போதிலும் வேறொருவருடனான அவரது உறவை நிறுத்த முடியாததாலும், தான் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக யோகேஷ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். தனது மனைவியின் துரோகத்தால் சமூகத்தில் தனது நற்பெயர் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில், தான் வைத்திருந்த உரிமம் பெற்ற ரிவால்வரால் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். கைதை தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, அவரது கைவசம் இருந்த தோட்டாக்கள், மற்றும் இரண்டு மொபைல் போன்கள் ஆகியவை அவரிடமிருந்து மீட்கப்பட்டன.
3 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை
சொத்து புரோக்கராக பணியாற்றி வரும் யோகேஷ், தனது முதல் மனைவி 2012 இல் இறந்த பிறகு, ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கைரானாவைச் சேர்ந்த நேஹாவை 2013ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தான் சந்தேகம் காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த 12 வயது ஷ்ரத்தா மற்றும் ஐந்து வயது தேவான்ஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 வயது மகன் சிவான்ஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தைகளின் பிரேத பரிசோதனை முடிந்ததும், ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதனிடையே, துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்த யோகேஷின் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பஜாக சொல்வது என்ன?
சம்பவம் தொடர்பாக நேஹாவின் சகோதரர் ரஜ்னீஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், யோகேஷ் ரோஹில்லா மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பாஜக அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
அதேநேரம், கங்கோ சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான கிரத் சிங், "இந்தச் சம்பவத்திற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. இது வேதனையளிக்கிறது. இந்தச் சம்பவம் மனிதாபிமானமற்றது. அந்த நபர் எந்த அரசியல் கட்சியை ஆதரித்தார் என்பது கேள்வி அல்ல” என பதிலளித்தார்.




















