புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்தல் : இருவர் கைது
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு ரூ.4 லட்சம் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கோட்டக்குப்பம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் சரவணன், ஏட்டுகள் பாலு, ராஜபாண்டி, சசிக்குமார், வசந்த குமார் ஆகியோர் கண்டமங்கலத்தை அடுத்த பள்ளித்தென்னல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் போலீசார் வழி மறித்து சோதனை செய்ததில் அந்த சரக்கு வாகனத்தினுள் 150 அட்டைப் பெட்டிகளில் 7,200 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சரக்கு வாகனத்தில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும், புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டை சேர்ந்த முருகன் மகன் பிரவீன் (வயது 24), புதுச்சேரி கலிதீர்த்தான் குப்பத்தை சேர்ந்த குணசேகரன் மகன் ராஜ்குமார் (24) என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் லிங்காரெட்டிப் பாளையத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி வந்ததும், உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் அரசு மதுக்கடைகளை மூடும்பட்சத்தில் அந்த சமயத்தில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை கடத்தியதும் தெரியவந்தது.
மேலும், இந்த கடத்தல் சம்பவத்திற்கு லிங்காரெட்டிப் பாளையத்தை சேர்ந்த பன்னீர் என்பவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரவீன், ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பன்னீரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் சரக்கு வாகனத்தை மாவட்ட காவல் கண்ண்கனிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் பார்வையிட்டு அதனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை பாராட்டினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கூறுகையில்:
உள்ளாட்சி தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுவதால் விழுப்புரம் மாவட்ட எல்லையான 9 இடங்களில் மதுபான கடத்தலை தடுக்கும் விதமாக சுழற்சி முறையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 65 போலீசார் மற்றும் 5 தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அரசியல் கட்சி வேட்பாளர்கள், மதுபாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்தாலும், மதுபானங்களை கடத்தினாலும் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் 590 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதால் அதனை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.