பண முதலீடு செய்தால் அதிக லாபம்.. லட்சக்கணக்கில் நடந்த மோசடி - இருவர் கைது!
சென்னையில், தனியார் நிறுவனத்தில் பண முதலீடு செய்தால் அதிகம் லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த விவேக்கு மார் (24)., இவர் முன்னதாக தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது,அங்கு அறிமுகமான நண்பர் மணி கண்டன் என்பவர் விவேக்கை தொடர்பு கொண்டு, தான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், அங்கு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் மாதந் தோறும் அதிக பணம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.
போலிஸிடம் புகார்
இதை நம்பி விவேக் 3 லட்ச ரூபாய் செலுத்திய நிலையில், கடந்த 2 மாதங்களாக எந்தப் பணமும் திரும்பத் தராமல் இருந்துள்ளனர். இந்நிலையில், பணத்தை தான் திரும்பக் கேட்டபோது தன்னை இவர்கள் மிரட்டியதாக விவேக்குமார் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், விவேக்குமார் அவரது நண்பர் மணிகண்டன் கூறியதை நம்பி சென்னைக்கு வந்ததும், எழும்பூர் ரயில் நிலையம் அருகே மணிகண்டன், சிவநேசன் அன்புமணி மற்றும் காளிதாஸ் ஆகியோரை சந்தித்ததும், அவர்கள் கூறியதை நம்பி விவேக் முதலீடு செய்ததும் தெரியவந்தது.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் 3 லட்சத்தை சிவநேசன் வங்கிக் கணக்கில் இரண்டு தவணைகளாக விவேக் செலுத்தியதும் அதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பணத்தை தராததும் தெரிய வந்தது.
3 ஆண்டுகளாக மோசடி
அதன்பேரில், எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட மணிகண்டனையும் அவரது நண்பரையும் காவல் துறையினர் நேற்று (ஜூன்.25) கைது செய்தனர். இவர்களிடமிருந்து விலையுயர்ந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், 2 ஐபோன்கள், ஒரு ஸ்மார்ட் வாட்ச் மற்றும் 10,000 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் இது போல பல இளைஞர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், தலைமறைவாக உள்ள சிவநேசன், அன்புமணி மற்றும் காளி தாஸ் ஆகியோரை பிடிக்கவும் காவல் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்