இன்ஸ்பெக்டர் பெயரில் போலி கடிதங்கள்... பக்தர்களிடம் பணவசூல்... சமயபுரத்தில் தனி மாநாடு நடத்திய சிம்பு கைது!
இப்படியே இருந்தால், நமக்கு பைசா வருமானம் வராது, என முடிவு செய்த சிலம்பரசன், சிபாரிசு கடிதம் மூலம் காசு பார்க்க முடிவு செய்தார்.
திருச்சி மாவட்டம், பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள நெ.1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்த வேம்படியான் மகன் சிலம்பரசன் (34 ). தமிழ்நாடு ஊர்காவல் படை காவலரான இவர், சமயபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய அடிக்கடி, போலீஸ் உயர் அதிகாரிகளும், ஓய்வு பெற்ற போலீசாரும் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வருவோருக்கு, சமயபுரம் காவல் நிலையத்தில் இருந்து சிபாரிசு கடிதம் வழங்கப்படுவது வழக்கமாம்.
அந்த கடிதத்தை கொண்டு சென்று கொடுத்தால், கோயிலில் எந்த கெடுபிடியும் இல்லாமல், சிறப்பான சுவாமி தரிசனம் செய்யலாம் என்கிறார்கள். இதற்காக அடிக்கடி அங்கு கடிதம் வழங்குவதும், பெறுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இதை அங்கு பணியில் இருந்த சிலம்பரசம் நன்கு கவனித்திருக்கிறார். அந்த கடிதத்தை கொண்டு செல்வோருக்கு கிடைக்கும் மரியாதையையும் கவனித்திருக்கிறார். இப்படியே இருந்தால், நமக்கு பைசா வருமானம் வராது, என முடிவு செய்த சிலம்பரசன், சிபாரிசு கடிதம் மூலம் காசு பார்க்க முடிவு செய்தார்.
காவல் நிலையம் அவரது கண்ட்ரோலில் இருந்ததால், சிபாரிசு கடிதங்களை போலியாக தயாரிக்கத் தொடங்கினார். பின்னர், இன்ஸ்பெக்டரின் முத்திரை மற்றும் கையெழுத்தை இவரே போலியாக போட்டு, சிபாரிசு கடிதங்களை நிறைய சேர்த்தார். வெளியூரிலிருந்து கோயிலுக்கு வருவோரிடம், சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி, குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு, பதிலுக்கு சிபாரிசு கடிதத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளார். இதில் நல்ல வருவாய் கொட்டியுள்ளது.
ஒரு கட்டத்தில் வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் சிபாரிசு கடிதத்துடன் வந்துள்ளனர். அத்தோடு, கோயில் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையும் குறைந்துள்ளது. என்னடா என்று விசாரித்தபோது, நிறைய சிபாரிசு கடிதங்கள் வருவதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அந்த கடிதங்களை வாங்கி விசாரணை நடத்திய போது, அவை அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. ஷாக் ஆன கோயில் கண்காணிப்பாளர் சாந்தி, உடனே சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டருக்கு அதை விட அதிர்ச்சி. நமது பெயரில், நமது முத்திரையை பயன்படுத்தி மோசடி நடந்திருக்கிறது; அதே புகார் நம்மிடம் வருகிறதே... என்று எண்ணி கவலையடைந்த அவர், சிம்புவை பிடித்து கையில் சங்கிலி மாட்டி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் முசிறி கிளைச் சிறையில் சிலம்பரசன் அடைக்கப்பட்டார்.
ஊர் வசூல் செய்து, ஊர்காவல் படை காவலர் ஒருவர் வருவாய் பார்த்து வந்த சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்