Crime: வந்தவாசியில் காணாமல் போன வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்பு - கொலை செய்ததாக 3 பேர் கைது
வந்தவாசி பகுதியில் காணாமல் போனதாக தேடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிற் பயிற்சி பணிபுரியும் வாலிபர் விவசாய கிணற்றிலிருந்து பிணமாக மீட்பு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் தேவன் வயது (24). இவர் ஐ.டி.ஐ படித்துவிட்டு செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிற் பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கீழ்ப்பாக்கம் கிராமத்துக்குச் சென்றுவிட்டு இரவு பைக்கில் புறப்பட்டவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தேவனின் பைக், செல்போன், செருப்பு ஆகியவை விளாங்காடு-கீழ்நர்மா சாலை, சாத்தனூர் கூட்டுச் சாலை அருகே சாலையோரம் கிடந்துள்ளது. அருகில் ரத்தக்கறையும் இருந்துள்ளது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் தேவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் கார்த்தி வயது (34), அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கோகுல்ராஜ் வயது (21), கொவளை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சேகர் வயது (21) ஆகிய 3 நபரும் சேர்ந்து தேவனை அடித்து கொலை செய்து, விளாங்காடு கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவரது விவசாய கிணற்றில் உடலை வீசியது தெரியவந்துள்ளது. உடல் இருந்த கிணற்றுக்கு விரைந்து சென்ற காவல்துறை, கிணற்றில் கிடந்த தேவனின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட கார்த்தி, கோகுல்ராஜ், சேகர் ஆகிய 3 நபரையும் காவல்துறை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் கீழ்கொடுங்காலூர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் வேலூர் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், தீபா சத்ரியன், சுதாகர் (காஞ்சீபுரம்) ஆகியோர் தலைமையில் வந்தவாசி மற்றும் கீழ்க்கொடுங்காலூர், பையூர், கீழ்ப்பாக்கம், கொவளை ஆகிய கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் 3 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவனின் உறவினர் வடிவேலு. இவருக்கு இதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி குடும்பத்தினர் ஏலச்சீட்டு பணம் தர வேண்டுமாம். அவர்கள் இழுத்தடிக்கவே, தேவனை ஞாயிற்றுக்கிழமை கீழ்ப்பாக்கத்துக்கு வரவழைத்த வடிவேலு, அவரை உடன் அழைத்துக் கொண்டு கார்த்தி குடும்பத்தினரிடம் சென்று சீட்டுப் பணம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு பைக்கில் தேவன் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த கார்த்தி, கோகுல்ராஜ், சேகர் ஆகியோர் தேவனை வழிமடக்கி கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட தேவனின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்பினர் கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் நேரில் சென்ற செய்யாறு கோட்டாட்சியர் வினோத்குமார், தேவனின் குடும்பத்துக்கு முதற்கட்டமாக 6 லட்சத்துக்கான காசோலை, அரிசி, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை நிவாரணமாக வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்