Crime: போளூர் அருகே மாமியாரை குத்திக்கொன்ற மருமகள் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
போளூர் அருகே சமுதாய கூடத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மூத்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த புலிவானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள் வயது (85). இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு செல்வம் வயது (65), ராஜி வயது (60), சின்னப்பையன் வயது (56) என மூன்று மகன்கள். இதில் 2 மகன்கள் இறந்து விட்டனர். மூன்றாவது மகன் சின்ன பையன் பராமரிப்பில் காசியம்மாள் இருந்து வந்தார். காசியம்மாளுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. இவருடைய இளைய மகன் சின்ன பையன் வீட்டில் சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தங்கி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த 1-ந் தேதி காசியம்மாள் மர்மமான முறையில் கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து போளூர் காவல்நிலையத்தில் இளைய மருமகள் குமாரி புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினருக்கு இறந்தவரின் மருமகள்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தின் அடிப்படையில் சின்னபையன், குமாரி, மற்றும் செல்வத்தின் மகன்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஆனாலும் காவல்துறையினருக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. பின்னர் காவல்துறையினர் காசியம்மாளின் கிராமத்தில் விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. மூத்த மருமகளான தேவகிக்கும் வயது (50) காசியம்மாளுக்கும் சொத்து தகராறு இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக போளூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் இந்த தகவல் அடிப்படையில் தேவகியை பிடிப்பதற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த தேவகி கூலிவேலை செய்துகொண்டு இருந்த இடத்தில் இருந்து வெளியூர் தப்பித்து செல்வதற்கு கொம்மனந்தல் பேருந்து நிலையம் சென்றுள்ளார். இதனை அறிந்த ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று தேவகியை பிடித்தனர்.
இந்த விசாரணையில் மாமியார் காசியம்மாளை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தேவகிக்கு நரேஷ், சுரேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். சுரேஷ் உள்ளூரில் கூலி வேலை செய்கிறார். நரேஷ் செங்கல் சூளை நடத்தி பெருமளவு நஷ்டம் அடைந்து தற்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கு ரூ.4 லட்சம் கடன் உள்ளது. கடனை அடைக்க வேண்டும் எனவே மாமியார் காசியம்மாளிடம் உள்ள 2 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து கொடுக்க தேவகி வலியுறுத்தி வந்தார். ஆனால் மாமியார் காசியம்மாள் 2 ஏக்கர் நிலத்தை இளைய மகன் சின்ன பையனுக்கு தான் கொடுப்பேன் என்று கூறிவிட்டார். இதனால் மாமியார் காசியம்மாளை கத்தியால் கழுத்தில் குத்திக் கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தேவகியை போலீசார் கைது செய்து போளூர் ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.