(Source: ECI/ABP News/ABP Majha)
மக்களிடம் கத்தியைக் காட்டி தொடர் அட்டூழியம்; 3 இளைஞர்களுக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ் - நடந்தது என்ன.?
திருவண்ணாமலையில் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த 3 இளைஞர்களை மாவுக்கட்டு போட்டு சிறையில் அடைத்த காவல்துறையினர்.
திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலைக்கு நாளுக்கு நாள் பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதில் திருவண்ணாமலை நகருக்குள் வராமல் வெளியே செல்வதற்கு வெளிப்புற நெடுஞ்சாலையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதில் இரவு 12 மணிமுதல் 2 மணிவரை வாகனங்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி வெளிப்புற நெடுஞ்சாலையில் மர்ம நபர்கள் கத்தியை காட்டி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் வழிபறியில் ஈடுபடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்தநிலையில் திருவண்ணாமலை நகர துணை காவல்கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று இரவு திருவண்ணாமலை நெடுஞ்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவல்துறையினரைக் கண்டதும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் காவல்துறையினரை கண்டதும் இருசக்கர வாகனத்தை பயத்துடன் திருப்பி அதிவேகமாக இயக்க முயன்றுள்ளனர். இவர்களை கண்டதும் காவல்துறையினருக்கு சந்தேகப்படும்படியாக இருந்துள்ளது. உடனடியாக அவர்களை காவல்துறையினர் விரட்டிச் சென்றபோது சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த 3 பேருக்கும் `ஒரே மாதிரியாக’ வலது கையில் மட்டும் முறிவு ஏற்பட்டதாக சொன்னார்கள்.
வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞ்சர்கள் கைது
மேலும் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், திருவண்ணாமலை சாரோன் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் வயது (30), வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த சோனாசலம் என்கிற பாலாஜி வயது (24), அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் வயது (25) ஆகியோர் என்பதும், தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேறகொண்டனர். அதில் இவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவர்கள் தொடர்ச்சியாக, பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் முறிந்த கைகளுக்கு மாவுக்கட்டு போட்டு சிறையில் அடைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.