(Source: ECI/ABP News/ABP Majha)
நிலத்தை மீட்டு தரக்கோரி கூலி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி - தி.மலையில் பரபரப்பு
ஜொள்ளு கோவிந்தனுக்கு அரசியல் பலம் பணபலம், ஆட்கள் பலம் இருப்பதால் தொடர்ந்து என்னை கொலை செய்வதாக மிரட்டல் விடுவித்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலத்தை மீட்டு தரக்கோரி கூலி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த வாரமும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த குறை தீர்வு கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா மாதாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பன்னீர் ஆறுமுகம் மகன் புவனேசன் இன்று அவருடைய மனைவி அவருடைய தாய், தந்தை இரண்டு குழந்தைகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது விவசாயி புவனேசனை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மாதாம்பூண்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி புவனேசன் வயது (40). இவருக்கு தாய் , தந்தை மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். புவனேஷ்குமார் திருவண்ணாமலை அடுத்த கீழ் அணைக்கரை கிராமத்தில் 2008 ஆம் ஆண்டு 765 சதுர கன அடி காலி மனை வாங்கியுள்ளார். இவருடைய பக்கத்து இடத்தை சார்ந்தவர் பழனி. அந்த இடத்தில் அவர் வெல்டிங் கடை வைத்துள்ளார். தனக்கும் பழனிக்கும் பொதுவழி பாதை உள்ளது. அந்த இடத்தை பழனி மட்டும் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி உள்ளார். இந்த சொத்துக்கும் இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத முன்னாள் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் ஜொல்லு கோவிந்தன் அவருடைய மனைவி மற்றும் சரவணன் ஆகியோர் சேர்ந்து பொது வழி மட்டுமல்லாமல் என்னுடைய சொந்த இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நான் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் காவல்துறை அதிகாரிகள் ஜொல்லு கோவிந்தன் மற்றும் சரவணன் ஆகியோரை விசாரணை நடத்தினர். இதற்கு மேல் நான் தலையிட மாட்டேன் என எழுதி கொடுத்தனர். மீண்டும் நான் செப்டெம்பர் 25ஆம் தேதி என்னுடைய மனைக்குச் சென்று சுத்தம் செய்த போது ஜொல்லு கோவிந்தன் அவருடைய மனைவி அங்கு வந்து யார் நீ இடத்தை சுத்தம் செய்வது என்று தகாத வார்த்தைகளால் பேசினார். மேலும் சொல்லு கோவிந்தனின் மகன் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அதனால் பயந்து அங்கிருந்து நாங்கள் சென்று விட்டோம் ஜொள்ளு கோவிந்தனுக்கு அரசியல் பலம் பணபலம், ஆட்கள் பலம் இருப்பதால் தொடர்ந்து என்னை கொலை செய்வதாக மிரட்டல் விடுவித்து வருகிறார்.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட புவனேசன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி சென்றனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. தனக்கு சொந்தமான பட்டா இடத்திற்கு செல்ல தடுக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென விவசாயி புவனேசன் கோரிக்கை விடுத்தார். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.