நெல்லையில் காவலாளியை தாக்கிய அரசு மருத்துவர் மீது வழக்குப்பதிவு
மரு. மோகன்குமார் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் உயரிய பொறுப்பில் உள்ள மருத்துவரே மது போதையில் அவர பணியாற்றும் மருத்துவமனையில் பணியில் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மருத்துவமனை என்பதால் எப்போது கூட்டம் அதிகமாகவும் பரபரப்பாகவும் காணப்படும். இந்த சூழலில் இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சைத்துறை தலைவராக பணியாற்றி வருபவர் மோகன்குமார். இவர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளும் செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவர் மோகன்குமார் பணி முடிந்து தனது காரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும் போது மருத்துவனை வாயிலை திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது வாயிலில் பாதுகாப்பிற்கு நின்ற தனியார் ஒப்பந்த பாதுகாவலர் ஆனந்தராஜிடம் மருத்துவர் மோகன்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. கோபத்தில் மருத்துவர் பாதுகாவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதி உதவி ஆய்வாளர் கோமதி பணியில் இருந்து உள்ளார். இதனை அடுத்து ஆனந்தராஜ் என்பவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் மருத்துவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் 106 மாணவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அறுவை சிகிச்சை தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதும் அந்தத் துறையின் பேராசிரியர் மரு. மோகன் குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மருத்துவர் மோகன்குமார் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் உயரிய பொறுப்பில் உள்ள ஒரு மருத்துவரே மது போதையில் அவர் பணியாற்றும் மருத்துவமனையில் பணியில் இருந்தது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்தும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.