![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: பெட்ரோல் போட்டவுடன் ஊழியரை அரிவாளுடன் மிரட்டும் நபர் - நாங்குநேரியில் பரபரப்பு
நாங்குநேரி பெட்ரோல் நிலையத்தில் ஊழியரிடம் வழிப்பறி செய்ய கொலை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: பெட்ரோல் போட்டவுடன் ஊழியரை அரிவாளுடன் மிரட்டும் நபர் - நாங்குநேரியில் பரபரப்பு Tirunelveli Crime Robbery attempt made at petrol pump near Nanguneri - TNN Crime: பெட்ரோல் போட்டவுடன் ஊழியரை அரிவாளுடன் மிரட்டும் நபர் - நாங்குநேரியில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/12f85d88f29ae2075f925e344a9b752d1715335146646571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்துள்ளது வாகைகுளம் கிராமம். இங்குள்ள நெல்லை - கன்னியாகுமரி தேசிய நான்கு வழிச் சாலையோரம் தனியார் பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. குறிப்பாக அதில் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் என பலரும் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்புவது வழக்கம். இதனால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய இடமாக இருக்கும். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு ஊழியர் முருகன்(45) என்பவர் அங்கு பணியில் இருந்து உள்ளார். அப்போது அங்கு ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்து வண்டிக்கு பெட்ரோல் போட்டு உள்ளனர். ஊழியர் முருகன் பெட்ரோல் போட்டு முடிந்ததும் அந்த வாகனத்தின் பின்னால் இருந்த நபர் திடீரென இறங்கி வந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஊழியர் முருகனை வெட்ட அரிவாளுடன் கையை ஓங்கியவாறு பாய்ந்து சென்றுள்ளார்.
மேலும் அவரிடமிருந்து பணப்பையையும் பறிக்க முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட அந்த ஊழியர் கையில் பணப்பையை பிடித்துக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி அருகில் இருந்த பெட்ரோல் நிலைய அலுவலகத்திற்குள் ஓடினார். உடனே அங்கிருந்த சக ஊழியர்கள் வெளியே வந்து பார்ப்பதற்குள் இரு சக்கர வாகனத்தில் இருந்த நபர் வாகனத்தை எடுக்க அரிவாளுடன் பின்னால் விரட்டி சென்ற நபர் அதே இருசக்கர வாகனத்தில் ஏறி இருவரும் தப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இது குறித்து நாங்குநேரி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து பெட்ரோல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த நாங்குநேரி காவல்துறையினர் தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலை பெட்ரோல் நிலைய பகுதியிலேயே இருவர் அரிவாளை காட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இதே பெட்ரோல் நிலைய அலுவலகத்தில் ரூ1.5 லட்சம் மர்ம நபர்களால் திருடிய சம்பவம் நடந்தது. ஆனால் அது இன்னும் துப்பு துலங்காத நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அங்கு ஊழியரிடம் வழிப்பறி மற்றும் கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையோரம் இத்தகைய பயங்கர வழிப்பறி கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்வதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு போதிய பாதுகாப்பு அளித்து அச்சமின்றி பயணிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)