Crime: திருவண்ணாமலை அருகே கோயில் வழிபாடு தொடர்பாக முகநூலில் மோதிக்கொண்ட 2 பேர் கைது
திருவண்ணாமலை அருகே செல்லங்குப்பம் கிராமத்தில் கோவில் வழிபாடு தொடர்பாக முகநூலில் மோதிக்கொண்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக்கோவில். இந்த கோவில் 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோவிலில் ஊர் மக்கள் திருவிழாக்கள் பல்வேறு விசேஷ தினங்களில் சாமி வழிபாடு உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். அதேபோல அதே கிராமத்தில் பட்டியல் இன வகுப்பு சார்ந்தவர்களுக்காக காளியம்மன் கோயில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பட்டியல் இனத்தை சார்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே பட்டியல் இனவகுப்பை சேர்ந்த தங்கராசு சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் ஊர் கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு தங்கள் இன மக்களும் உள்ளே சென்று தரிசனம் செய்ய வேண்டுமென கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக முகநூல் பக்கத்திலும் தங்கராசு பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பொதுப்பிரிவினை சேர்ந்த செந்தமிழும் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் முகநூல் பக்கங்களில் பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து இருவரும் ஒரு கட்டத்தில் தங்கள் கிராமத்திற்கு பார்த்துக் கொள்ளலாம் என முகநூலில் பதிவிட்டு இருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிராமத்திற்கு வந்த தங்கராசு மற்றும் செந்தமிழ் ஆகிய 2 பேருக்கும் கிராமத்தின் மையப் பகுதியில் வாய் தகராறு ஆக ஆரம்பித்து கைகலப்பாகவும் மாறியது. இதனை அறிந்த ஊர் மக்கள் அவர்கள் இருவரும் தகராறில் ஈடுபடாமல் இருப்பதற்காக தடுக்கும் சமயத்தில், இரு வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவம் பின்னர் கைகலப்பாகவும் மாறி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் பலத்த காயமடைந்த இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை அறிந்த வேட்டவலம் காவல்துறையினர் பலத்த காவல் பாதுகாப்புடன் செல்லங்குப்பம் கிராமத்திற்கு வந்த பொழுது காவல் துறையினருடைய வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைத்தனர். தற்பொழுது செல்லங்குப்பம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவிலுக்குள் நுழைவது குறித்து இரு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் முகநூல் பக்கத்தில் வாக்குவாதம் செய்து வந்த நிலையில் தற்பொழுது ஒரே கிராமத்தில் இருவரும் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை தொடர்பாக தங்கராஜ், செந்தமிழ் ஆகிய இருவரும் வேட்டவலம் காவல்நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில் துணை ஆய்வாளர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ், செந்தமிழன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த மோதல் தொடர்பான பிரச்சினையில் தலைமறைவான உத்தரகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். பாதுகாப்பு மோதல் தொடர்பாக செல்லங்குப்பம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட்டுள்ளனர்.
Join Us on Telegram: https://t.me/abpnaduofficial