ஒமிக்ரானில் இருந்து குணமடைந்த நபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து எறிந்ததால் பரபரப்பு
தடுப்புகளை உடைத்து எறிந்த நபர் மீது 269 ,271 ஆகிய இரண்டு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் மத்திய ஆப்பிரிக்கா காங்கோ நாட்டில் இருந்து கடந்த 12 ஆம் தேதி சொந்த ஊரான ஆரணிக்கு வந்தார். அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு ஓமிக்ரான் அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு ஓமிக்ரான், பரிசோதனை செய்ததில் ஓமிக்ரான் தொற்று உறுதியானது.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஓமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அந்த பெண்ணின் தந்தைக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஓமிக்ரான் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாட்களில் குணமடைந்ததால் இருவரையும் மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்தது.
இதையடுத்து ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட பெண்ணின் 32 வயதான சகோதரருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆரணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஆரணி அருகே பையூர் பகுதியில் அவர்கள் வசிக்கும் தெருவைச் சுற்றி சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறையினர் தடுப்பு வேலி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பெண்ணின் குடும்பத்தினருடன் தொடர்பு உள்ளவர்களையும் பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும் ஓமிக்ரான் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட காங்கோ நாட்டில் இருந்து வந்த பெண் மற்றும் அவரது தந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்த பின்னர் தெருவில் உள்ள தடுப்பை அந்த பெண்ணின் தந்தை உடைத்து எறிந்தார். அதனைப் பார்வையிட்ட கோட்டாட்சியர் கவிதா உத்தரவின் பேரில் பையூர் கிராம நிர்வாக அலுவலர் லோகேஷ் காங்கோ நாட்டில் இருந்து வந்த பெண்ணின் தந்தை மீது ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த ஆரணி கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மீது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தொற்று நோயை பரப்பும் சட்டப்பிரிவு 269 மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிக்கு கீழ்ப்படியாமைக்கான சட்டப்பிரிவு 271 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.