வீட்டின் பூட்டை உடைத்து ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு - பெரியகுளம் அருகே பரபரப்பு
பெரியகுளம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ஐம்பொன் சாமி சிலைகள், 30 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் அண்ணா அறிஞர் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (53). இவர் அப்பகுதியில் கோவிலில் புரோகிதராக வேலை செய்து வருகிறார். கடந்த 12-ந்தேதி இவர், வீட்டை பூட்டி விட்டு சொந்த வேலை காரணமாக நெல்லைக்கு சென்றார். மறுநாள் அவரது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பழனிவேலுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.இதைக்கேட்டதும் பதற்றம் அடைந்த அவர் நெல்லையில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அப்போது பூஜை அறையில் இருந்த ¾ அடி உயர ஐம்பொன்னால் ஆன முருகன், வள்ளி-தெய்வானை சிலைகள், அந்த சிலைகளில் அணிந்திருந்த ½ பவுன் தாலியை காணவில்லை.
இறந்தும் உயிர் வாழும் கண்கள்.. விஜய் விழியகம் கொண்டு வந்த மாற்றம்.. குவியும் பாராட்டுக்கள்..!
மேலும் வீட்டில் அலமாரியில் இருந்த ரூ.30 ஆயிரமும் பணமும் திருடுபோய் இருந்தது. இதையடுத்து அவர் தென்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து சாமி சிலைகள், பணத்தை திருடி சென்ற துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.