கூடலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ கஞ்ச பறிமுதல் - பெண்கள் உட்பட 7 பேர் கைது
தேனி மாவட்டம் கூடலூரில் சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ கஞ்ச பறிமுதல். பெண்கள் உட்பட 7 பேர் கைது.மோட்டார்சைக்கிள் மற்றும் ரூ.26 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர் வடக்கு ரத வீதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பிச்சை பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வடக்கு ரத வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா (24) என்பவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது விற்பனைக்காக 2 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரனையில், அதே பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி (50), சிவரஞ்சனி (27), ரஞ்சித் குமார் (24) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கூடலூர் 1-வது வார்டு அரசமரத் தெருவை சேர்ந்த பிரபு என்பவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக விலைக்கு வாங்கி வந்து விற்பனைக்காக இவர்களிடம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசாரும் அவரையும், கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த சபரிமணி (25), காமராஜர் தெருவை சேர்ந்த அருண்பாண்டியன் (26) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 6 கிலோ கஞ்சா, மோட்டார்சைக்கிள் மற்றும் ரூ.26 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்