புத்தாண்டு அன்று திருடிய திருடனை 24 மணி நேரத்தில் பிடித்த போலீஸ் - குடும்பத்துடன் திருட்டு தொழில் செய்தது அம்பலம்
’’கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 51 சவரன் தங்க நகைகள், 31 ஆயிரம் ரொக்க பணம், மற்றும் 2 கார்கள், டிராக்டர் 1, மினி டெம்போ 1, இருசக்கர வாகனம் 3, செல்போன் 5 பறிமுதல்’’
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சைமன், இவர் புத்தாண்டு அன்று நள்ளிரவு வீட்டின் முதல் மாடியில் உள்ள கதவை திறந்து வைத்து விட்டு வீட்டின் கீழே உள்ள அறைகளில் குடும்பத்துடன் உறங்கினார். இதனை நோட்டமிட்ட திருடன் நள்ளிரவு முதல் மாடிக்கு சுவற்றின் மீது ஏறி அந்த வழியாக உள்ளே புகுந்து மாடியில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 50 சவரன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றார். மேலும் அதே பகுதிகளில் அடுத்த அடுத்த 4 வீடுகளில் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர், ஆனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இது குறித்து உவரி போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த சூழலில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்வையிட்டதில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் தலையில் துணியை கட்டிக் கொண்டு, சட்டை இல்லாமல் சாரம் அணிந்தபடி மடியில் ஆயுதத்தை துணியால் சுத்தி வைத்து கொண்டு வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் ஏறி குதித்து வீட்டிற்குள் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது, இந்த பதிவுகளின் அடிப்படையில் உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் 2 தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் காரம்பாடு பகுதியில் இருந்து நாங்குநேரி செல்லும் பைபாஸ் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து விசாரணை செய்ததில் தென்காசியை சேர்ந்த பெஞ்சமின் என்பதும் அவர் குடும்பத்துடன் உவரியில் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது, மேலும் இந்த கொள்ளையில் அவரது மனைவி காளீஸ்வரி, சகோகரர் ஈசாக் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது, இது குறித்து வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய சிங் மீனா உவரி காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறும் பொழுது,
திசையன்விளை அருகே இடையன்குடி பகுயில் வீட்டின் பூட்டை உடைத்து 51 சவரன் தங்க நகைகள், 80 ஆயிரம் பணம் கொள்ளை போனது. குற்றவாளிகளை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 51 சவரன் தங்க நகைகள், 31 ஆயிரம் ரொக்க பணம், மற்றும் 2 கார்கள், டிராக்டர் 1, மினி டெம்போ 1, இருசக்கர வாகனம் 3, செல்போன் 5 பறிமுதல் செய்து உள்ளோம்.
மேலும் பெஞ்சமின் பல்வேறு வழக்குகளில் உள்ள குற்றவாளி, அவர் மீது பல காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா மீனா கூறினார்., கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.