(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: காவலர் குடியிருப்பிலேயே அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு: வசமாக சிக்கிய எஸ்.ஐ. மகன் - நடந்தது என்ன?
சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆயுதப்படை எஸ்ஐ வேணுகோபால் என்பவரின் மகன் நந்தகுமார், ரமேஷ் உள்ளிட்ட 3 பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளை நடைபெற்ற காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ஆயுதப்படை எஸ்ஐ வேணுகோபால் என்பவரின் மகன் நந்தகுமார், கஞ்சா போதை ஆசாமி ரமேஷ் உள்ளிட்ட மூன்று பேரை பிடித்து எழும்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தின் பின்புறம் காவலர் குடியிருப்பு இருக்கிறது. இந்த குடியிருப்பில் ஆயிரக்கணக்கான காவலர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் புதிதாக கட்டப்பட்ட இந்த குடியிருப்பை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
கடந்த 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் காவலர் குடியிருப்பில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. எழும்பூர் காவலர் குடியிருப்பில் 8 தளம் கொண்ட எம் 6 எம் 7 பிளாக்குகள் இருக்கிறது. இந்த பிளாக்கில் நூற்றுக்கணக்கான காவலர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு சாவியை அருகே உள்ள பூந்தொட்டி மற்றும் சுவற்றில் மாட்டிவிட்டு செல்வது வழக்கம். இதை பல நாட்கள் நோட்டமிட்ட நபர்கள் இரண்டு பிளாக்குகளிலும் உள்ள1,3,மற்றும் 6 ஆம் தளங்களில் காவலர்களின் வீடுகளின் சாவிகளை எடுத்து வீட்டை திறந்து 25 சவரன் தங்க நகை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் மூன்று செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எழும்பூர் காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக காவலர் குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருப்பதை பயன்படுத்தி கொள்ளையர்கள் இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். மேலும் காவலர் குடியிருப்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்படாமல் இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும் அடிக்கடி இருசக்கர வாகனங்களும் கொள்ளை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து, காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ஆயுதப்படை எஸ்ஐ வேணுகோபால் என்பவரின் மகன் நந்தகுமார், கஞ்சா போதை ஆசாமி ரமேஷ் உள்ளிட்ட மூன்று பேரை பிடித்து எழும்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதை ஆசாமிகள் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாக காவல்துறை விசாரணையில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.