தலையை சிதைத்து வெறியாட்டம்... நடு ரோட்டில் ஓட, ஓட விரட்டி முதியவர் வெட்டிக் கொலை
தஞ்சாவூர்: தஞ்சையில் வக்கீல் குமாஸ்தாவை ஓட, ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதை தடுக்க வந்த அவருடைய மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல்
தஞ்சை வடக்கு வாசல் சிரேஸ்சத்திரம் சாலையைச் சேர்ந்தவர் அற்புதம் (70). வக்கீல் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தார். அப்போது திடீரென்று வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் அற்புதத்தை அரிவாளால் வெட்ட முயன்றது. அப்போது அவர் அந்த கும்பலை பிடித்து தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்துள்ளார்.
ரோட்டில் ஓட, ஓட விரட்டி கொலை
அவர்களிடம் இருந்து தப்பிய அற்புதம் வடக்கு வாசல் நான்கு ரோட்டை நோக்கி ஓடிவந்துள்ளார். அவரது வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஓடி வந்த போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் அரிவாள் உட்பட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி தள்ளினர். முதியவர் என்று கூட நினைக்காமல் அந்த கும்பல் வெறியாட்டம் ஆடியது. வீடு புகுந்து கணவரை வெட்ட ஒரு கும்பல் வந்ததை கண்டு அற்புதத்தின் மனைவியும் சுபாங்கினி (65) பின்னாடியே ஓடி வந்துள்ளார். அவர் மர்ம நபர்களை தடுக்கும் போது அவரையும் ஈவுஇரக்கம் பார்க்காமல் தலையில் வெட்டி உள்ளனர்.
தலையை சிதைத்து வெறியாட்டம்
பின்னர் மர்ம நபர்கள் அற்புதத்தை நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி தலையை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேற்கு போலீசார் விசாரணை
இது குறித்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், டவுன் டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து காயமடைந்த சுபாங்கினியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த அற்புதத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் நான்கு மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் வக்கீல் குமாஸ்தா அற்புதத்தின் கொலை பின்னணியில் அவரது இரண்டாவது மருமகனுக்கு சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வக்கீல் குமாஸ்தா கொலை வழக்கின் பின்னணி
வக்கீல் குமாஸ்தா அற்புதத்தின் இரண்டாவது மகள் மேனகா. இவரை சக்திவேல் என்பவர் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சக்திவேல், சசிகலா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். தன் மகளை மருமகன் சக்திவேல் ஏமாற்றியதால் இதனை அற்புதம் தட்டி கேட்டுள்ளார்.
இந்நிலையில் விவாகரத்து கேட்டு சக்திவேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதைடுத்து அற்புதம் சக்திவேல் இரண்டாவது மனைவியான சசிகலாவுக்கு வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் கூலிப்படையினர் வைத்து மாமனாரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சக்திவேலை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.