Tenkasi : ஆலங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி... காரணம் என்ன?
”இந்நிலையில் காவல் நிலையத்தில் பல்வேறு பெண்கள் குழந்தைகள் சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. இந்த பணிகளாலும் அவர் கடும் மனஉளைச்சலில் இருந்து பணி புரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது”

ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் சாந்தகுமாரி. இவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு வரை மதுரையில் பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து பணி மாறுதல் ஆகி ஆலங்குளம் காவல்நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். ஏற்கனவே ஏற்பட்ட விபத்து காரணமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் ஆலங்குளம் பணிக்கு வந்த சில நாட்களிலேயே மருத்துவ விடுப்பு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் மருத்துவ விடுப்பு முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பணிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் பல்வேறு பெண்கள் குழந்தைகள் சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. இந்த பணிகளாலும் அவர் கடும் மனஉளைச்சலில் இருந்து பணி புரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நேற்று இரவு ரோந்து பணிக்காக காவல் நிலையம் வந்த ஆய்வாளர் கழிப்பறைக்கு சென்று உள்ளார். அங்கு விஷம் அருந்தி விட்டு வெளியே வந்து அங்கிருந்த பெண் காவலர்களிடம் வாய் குளறியபடி பேசி உள்ளார். தொடர்ந்து வாந்தி எடுத்த அவர் காவல் நிலைய தரையிலேயே மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவரது வாயில் இருந்து மருந்து வாடை வந்துள்ளது. அதன் பின் ஆய்வாளர் சாந்த குமாரியை மீட்ட ஜீப்ஒட்டுநர் மற்றும் பெண் காவலர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்று அனுமதித்தனர்.
ஆனால் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கான அடிப்படை வசதி எதுவும் இல்லாததால் அங்கு முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆய்வாளர் சாந்தகுமாரி கொசுமருந்து (ஆல்அவுட்) திரவத்தை குடித்ததாக கூறப்படுகிறது. பணியில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஆய்வாளர் தற்கொலை செய்து கொள்ள முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இந்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

