தஞ்சை மாணவி மரணம் : முதற்கட்ட விசாரணையில் மதம் மாறச்சொல்லியது உறுதியாகவில்லை - தஞ்சை எஸ்.பி
மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் முதற்கட்ட விசாரணையில் மதம்மாறச் சொல்லி வற்புறுத்தியதாக எந்த தகவலும் உறுதியாகவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு விடுதி வார்டனின் தொல்லையே காரணம் என்று முதலில் தகவல்கள் பரவியது. பின்னர், மாணவியை மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தியதாலே மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
“மாணவி பேசிய வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? எப்படி எடுக்கப்பட்டது? குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் மதம் மாறுமாறு வற்புறுத்தியதாக எந்தவொரு குற்றச்சாட்டும் கிடைக்கப்பெறவில்லை. மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 305 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தரப்பில் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக, விசாரிக்க உள்ளோம். மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது சிறார் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பிரேத பரிசோதனை இன்றுதான் நிறைவு பெற்றுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.
மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று சில அமைப்புகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்