இளம் பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - 4 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்
கொலை செய்யப்பட்ட பெண்ணோடு தொடர்பில் இருந்ததால் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 4 பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவு
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த தேஜ்மண்டல் என்ற மாற்றுத்திறனாளி பெண் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி அவரது வீட்டில் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் விபச்சாரத்தில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து கொலையாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் குமாரசாமிப்பட்டியில் அதிமுக பிரமுகர் நடேசன் என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் உள்ள ஒரு வீட்டில் பெங்களூருவைச் சேர்ந்த மாற்றுதிறனாளி பெண் தேஜ் மண்டல் (27) என்பவர் தனது கணவர் பிரதாப் என்பவருடன் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டின் உரிமையாளருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதாப் கடந்த சில நாட்களாக சென்னையில் இருப்பதாகவும், தேஜ் மண்டல் எனது செல்போன் அழைப்பை எடுக்க வில்லை என்றும் தகவல் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து உரிமையாளர் நடேசன் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்துள்ளது.
மேலும் வீட்டிலிருந்து அருவருக்கத்தக்க துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து உடனடியாக நடேசன் அளித்த தகவலின் பேரில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவின் தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பரண் மீது ஒரு சூட்கேஸ் மட்டும் இருந்துள்ளது இதிலிருந்து ரத்தம் கசிந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர். உடனடியாக மருத்துவ குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்த காவல் துறையினர் சூட்கேசை திறந்து பார்த்த போது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டின் உரிமையாளர் நடேசன், கொலை செய்யப்பட்ட பெண் தேஜ் மண்டல் என்பதை உறுதி செய்தார்.
இந்த நிலையில் தேஜ் மண்டலின் செல்போனை ஆய்வு செய்ததில் அஸ்தம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் கலைச்செல்வன், சேகர் மற்றும் காவலர் மணிகண்டன் ஆகியோர் பலமுறை அவருடன் செல்போனில் பேசி கொண்டிருந்ததும், விபச்சாரம் செய்வது தெரிந்தும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் விபச்சாரத்திற்கு துணை போனதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் உள்பட 4 பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவு பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் சேலம் மாநகர காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.