பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஆயுள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறப்பு நீதிமன்றம் ஒன்று முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருக்கும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறப்பு நீதிமன்றம் ஒன்று முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள் அஷோக் திவாரி, ஆஷிஷ் ஷுக்லா ஆகிய மூவருக்கும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், மூவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.கே.ராய் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கோரிய மனுவை மறுத்து உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் மூவரும் தீர்ப்பு அறிவித்த போது, நீதிமன்றத்தில் இருந்தனர். மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், மூவருக்கும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், அரசுத் தரப்பில் தண்டனைக் காலத்தைக் குறைப்பது குறித்து கடுமையாக எதிர்க்கப்பட்டது. `அமைச்சர் பதவில் இருந்த ஒருவர் இப்படியொரு குற்றத்தைத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி செய்வார் என்றால், அவருக்கான தண்டனையை நீதிமன்றம் சமூகத்திற்குச் சொல்லும் செய்தியாக அமைய வேண்டும்’ என்று அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது.
முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அரசில் சுரங்கத் துறை அமைச்சராக இருந்த காயத்ரி பிரஜாபதி கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு பெண்ணை வன்கொடுமை செய்ததற்காகவும், அவரது மகளான சிறுமியை வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்போது முதல் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். மேலும் அவர் அமைச்சராக இருந்த போது சுரங்கத் துறையில் ஊழல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, பல்வேறு வழக்குகளின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
இந்தக் கால இடைவெளியில், அவருக்கு ஒரு முறை ஜாமீன் வழங்கப்பட்டு, அவர் சிறையில் இருந்து வெளி வருவதற்கு முன்பே அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் வழங்கப்பட்டதில், ஏமாற்று வேலை நிகழ்ந்திருப்பதாகக் கூறியது.
தற்போதைய கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு அளித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், குற்றவாளிகள் மூவரும் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் முதலானவற்றின் கீழ் சிறையில் அடைக்கப்படுவதாகக் கூறியுள்ளது. எனினும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நான்கு கூட்டாளிகளும் ஆதாரம் இல்லை என்பதால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 17 சாட்சிகள் கொண்டு வரப்பட்டனர்.
மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த வழக்கு குறித்து பேசிய போது, முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதியின் கூட்டாளி ஆஷிஷ் ஷுக்லா முன்னாள் அமைச்சரின் பணிகளை மாநிலத் தலைநகர் லக்னோவிலும், அவரது தொகுதி அமேதியிலும் கண்காணித்து வந்தவர் எனக் கூறியுள்ளார். மற்றொரு கூட்டாளியான அஷோக் திவாரி அமேதி பகுதியில் அரசு அலுவலராகப் பதவியில் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். தற்போது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.