காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதை தட்டி கேட்ட சகோதரர்களுக்கு அரிவாள் வெட்டு!
"காஞ்சிபுரத்தில் ஸ்பீக்கரில் சத்தத்துடன் பாட்டு கேட்ட இளைஞர்களை தட்டி கேட்ட நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது"

காஞ்சிபுரம் அருகே அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதை தட்டி கேட்ட சகோதரர்களுக்கு அரிவாள் வெட்டு, கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயலால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சகோதரர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பீக்கரில் பாட்டு கேட்ட இளைஞர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் டில்லிபாபு. டில்லிபாபு மனைவி நந்தினி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் டில்லி பாபுவின் தாய் யசோதா அவரது அண்ணன் சங்கர் காஞ்சிபுரம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாய் யசோதாவும் அவரது அண்ணன் சங்கரும் டில்லிபாபு வீட்டிற்கு வந்துள்ளனர். இந்தநிலையில் டில்லிபாபு இரவு தனது எதிர் வீட்டினர் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட டில்லி பாபுவிற்கும் எதிர் வீட்டை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
கஞ்சா போதையில் பயங்கர வெட்டு
டில்லி பாபுவிற்கும் எதிர் வீட்டினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவரது அண்ணன் சங்கரும் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டது குறித்து தட்டி கேட்டுள்ளனர். இந்தநிலையில் எதிர் வீட்டில் இருக்கக்கூடிய இளைஞர் அவரது நண்பர்கள் என 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரிவால், உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் டில்லி பாபு அவரது அண்ணனான சங்கர் ஆகிய இருவரையும் தலை கை உள்ளிட்ட இடங்களில் பயங்கரமாக வெட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
தாக்குதலில் படுகாயம் அடைந்த டில்லி பாபு அவரது அண்ணன் சங்கர் ஆகிய இருவரும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து தாக்குதலுக்குள்ளான குடும்பத்தினர் கூறுகையில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டதை தட்டி கேட்டதற்காக எங்களை கண் மூடி தனமாக அறிவாளால் வெட்டியதாக கூறினார்.
கஞ்சா போதையால் நடந்த கொடுமை
சம்பந்தப்பட்ட நபர்கள் அதீத கஞ்சா போதையில் இருந்ததாகவும் தொடர்ந்து அந்த பகுதியில் கஞ்சா பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர். இதற்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் இருப்பதாகவும் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதை தட்டிக் கேட்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து எதிர் வீட்டை சேர்ந்தவர்கள் தங்கள் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதை தட்டி கேட்ட சகோதரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குடியிருப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















