(Source: ECI/ABP News/ABP Majha)
குடி குடியை கெடுக்கும்: தனக்கு வாங்கி வைத்திருந்த மதுவை குடித்ததால் மனைவியை கொன்ற கணவன் கைது
’’நான் எனக்காக வாங்கி வைக்கும் மதுவை எனது மனைவி எடுத்து குடித்துவிடுவார். இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும்’’
ஓமலூர் அருகே தனக்கு வாங்கி வைத்திருந்த மதுவை குடித்த மனைவியை கணவன் அடித்து கீழே தள்ளி கொலை செய்தார். தலைமறைவாக இருந்த கணவரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்ச நாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள பள்ளர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன், சரண்யா தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில், இருவரும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரண்யா திடீரென இறந்து விட்டதாக கூறி, ஈரோட்டில் உள்ள அவரது தம்பி நந்த குமாருக்கு லட்சுமணன் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நந்த குமார், தனது அக்கா சரண்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தனது சகோதரி இயற்கையாக இறக்கவில்லை எனவும் மாமா லட்சுமணன் அடித்து கொலை செய்து விட்டதாகவும் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினரிடம் புகார் அளித்ததை தெரிந்துகொண்ட லட்சுமணன் தலைமறைவாகி விட்டார். இந்த புகாரினை தொடர்ந்து ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த குமார் மற்றும் போலீசார் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், சரண்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த லட்சுமணனை போலீசார் தேடி வந்தனர். பின்னர், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். பின்னர், நடந்த சம்பவம் குறித்து லட்சுமணன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது தனக்கும், தனது மனைவிக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளது.
நான் எனக்காக வாங்கி வைக்கும் மதுவை எனது மனைவி எடுத்து குடித்துவிடுவார். இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் அதே போல எனது மதுவை குடித்துவிட்டு தகறாரு செய்த மனைவியை கீழே தள்ளிய போது, தலையில் அடிபட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சரண்யாவின் கணவர் லட்சுமணனை கைது செய்த தீவட்டிப்பட்டி காவலர்கள் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றத்தைத் தானே ஒத்துக் கொண்டதால் லட்சுமணன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மதுவிற்காக மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் ஓமலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.