Crime: எடப்பாடியில் விஏஓ-வை தாக்கிய மண் கடத்தல் கும்பல்; 2 பேர் கைது
மண் கடத்தல் கும்பலால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் குமார் எடப்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் மண் மற்றும் கல் இரவு நேரங்களில் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய முன்தினம் நள்ளிரவில் சமுத்திர கிராமம் காளியம்மன் கோயில் மூலக்கடை அருகே கல் மற்றும் மண் கடத்துவதாக எடப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து எடப்பாடி வட்டாட்சியர், சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் தாதாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். சமுத்திரம், மூலக்கடை காளியம்மன் கோயில் அருகே மண் மற்றும் கல் கடத்தும் கும்பலை பிடிக்குமாறு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு தாதாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் மற்றும் சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மண் கடத்திக் கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்தனர். அப்போது மண் கடத்திய கும்பல் கிராம நிர்வாக அலுவலர் குமாரை சுற்றி வளைத்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தாக்கியுள்ளனர்.
தாக்கிய கும்பலிடம் இருந்து குமாரை மீட்ட தாதாபுரம் கிராம நிர்வாக அலுவலர் எடப்பாடி அரசு மருத்துவமனை கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். மண் கடத்தல் கும்பலால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் குமார் எடப்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொங்கணாபுரம் காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் தாக்கிய கும்பல் மீது வழக்கு பதிவு செய்து தாக்கிய கும்பலை தேடி வந்த நிலையில் காவல்துறையினர் நேற்று புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்களை தாக்கிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.