சேலத்தில் பரபரப்பு.. லாட்டரி விற்பனையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் மீது கொலைவெறி தாக்குதல்
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.
சேலத்தில் கொடிக்கட்டி பறக்கும் லாட்டரி விற்பனையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே லாட்டரி விற்பனையானது கொடிக்கட்டி பறக்கிறது. இந்த நிலையில் சேலம் மாநகரில் கருங்கல்பட்டி, களரம்பட்டி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள், தேநீர் கடைகளில் எவ்வித அச்சமும் இன்றி லாட்டரி விற்பனை நடைபெறுவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் பெரியசாமி கடந்த வாரம் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் உலாவவிட்டார். மேலும் சேலம் மாநகரில் சட்டவிரோத மது மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்க பல்வேறு போராட்டங்களையும் இவர் முன்னெடுத்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் பெரியசாமி எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு தாதகாப்பட்டி பகுதியில் சென்றபோது அவரை வழிமறித்த லாட்டரி விற்பனையாளர்கள் அருண், சதீஷ் உள்ளிட்டோர் இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரின் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி ரத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாநகரில் காவல்துறையினரின் உதவியோடுதான் லாட்டரி விற்பனை நடப்பதாகவும், போலீசார் அளித்த தகவலின் பேரிலேயே பெரியசாமி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சேலம் மாநகர காவல் துறையை கண்டித்தும் பெரியசாமி மீது நிகழ்ந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்தும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், தொடர்ந்து மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுக்கக்கூடிய நடவடிக்கை போதை பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை தடை செய்யப்பட்ட காட்டரி சீட்டு விற்பக் கூடிய நடவடிக்கை கூடுதலாக்கி கொண்டே வருகிறது. இதற்கு ஆளுகிற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் காவல்துறைய உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும் காவல்துறையின் கீழ்மட்ட அதிகாரிகளோடு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையாளர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.
இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குற்றவாளிகளை கைது செய்ய கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தள்ளும் உள்ளாக ஏற்பட்டதால் காவல்துறையினர் முற்றுகையில் ஈடுபட்ட வரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். சேலம் மாநகரில் எவ்வித அச்சமும் இன்றி நடைபெற்று வந்த லாட்டரி விற்பனையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.