Crime: மனைவியை நிர்வாணப்படுத்தி போட்டோ எடுத்து மிரட்டல்; புதுமாப்பிள்ளைக்கு போலீஸ் வலை
நிர்வாணப்படுத்தி போட்டோ எடுத்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வைத்ததும், தன்னுடன் குடும்பம் நடத்த வராவிட்டால், போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியட்டு விடுவேன் என்று மிரட்டியதாக புகார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு செந்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (23). இவரும் சேலம் அயோத்தியபட்டினம் அடுத்துள்ள காரிப்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த மாதம் வீட்டிலிருந்து வெளியேறிய இளம்பெண், செந்திலை திருமணம் செய்து கொண்டு, ஏற்காட்டில் காதல் கணவனுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி, தனது பெற்றோரை தொடர்பு கொண்ட இளம்பெண், தான் குப்பனூரில் இருப்பதாக தெரிவித்தார். பெற்றோர் அங்கு சென்று விசாரித்த போது, கணவனிடம் இருந்து வீட்டிற்கு தெரியாமல் தப்பி வந்ததாக கூறியுள்ளார். மேலும், தனது காதல் கணவரான செந்தில், தன்னை நிர்வாணப்படுத்தி செல்போனில் போட்டோ எடுத்து, அதனை அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்ததாகவும், இதனால் அவருக்கு தெரியாமல் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, காரிப்பட்டி காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன்பேரில் காரிப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், செந்தில் தனது மனைவியை நிர்வாணப்படுத்தி போட்டோ எடுத்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வைத்ததும், தன்னுடன் குடும்பம் நடத்த வராவிட்டால், போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதும் தெரிந்தது. இதையடுத்து அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காரிப்பட்டி காவல்துறையினர், செந்திலை பிடிக்க தனிப்படை போலீசார் ஏற்காட்டில் முகாமிட்டு தேடி வருகின்றனர். காதலரை திருமணம் செய்து கொண்ட இளம் பெண் திருமணம் ஆகி 15 நாளில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.