Salem Money Scam: ‘சதுரங்க வேட்டை’ படத்தை மிஞ்சிய மோசடி சம்பவம்... புகார் அளிக்க வராத மக்கள்... காரணம் என்ன?
சிறைகாவலர் மகளை ஏமாற்றி 22 பவுன் நகைகள் வாங்கியதுடன், ஐபிஎஸ் அதிகாரி என கூறி, மோசடி ராணி விஜயபானு வலம் வந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் காவல்துறையினர் விசாரணையில் வெளிவந்துள்ளது.

சேலத்தில் பண இரட்டிப்பு செய்து தருவதாக கூறி புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு உள்பட 7 பேரை பொருளாதார போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏழு பேர் கைது:
இந்த நிலையில் 12.5 கோடி பணம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை ஆஜர்படுத்தி பின்னர் சேலம் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதனிடையில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர் மாவட்ட கருவூலத்தில் இருந்து 12.5 கோடி பணம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவை 10பெட்டிகளில் காவல்துறை வாகனத்தில் பத்திரமாக வைத்து பாதுகாப்பாக ஸ்டேட் பேங்கில் அரசு கணக்கில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விஜயபானு, ஜெயப்பிரதா, பாஸ்கர், சையதுமுகமது உட்பட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ரூ.500 கோடி மோசடி:
இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அறக்கட்டளை சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் 500 கோடி வரை மோசடியில் செய்திருப்பது தெரியவந்துள்ளது. மோசடி பணத்தினை சேலம் மற்றும் பிற மாவட்டங்களில் சொத்து வாங்கி குவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த மோசடி தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் இதுவரை 119 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த மோசடி வழக்கில் கைதான விஜயபானு மற்றும் ஜெயப்பிரதாவின் ஆறு வங்கி கணக்குகள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அழகாபுரம் பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் விஜயபானுவின் கார் ஓட்டுநர் சையது முகமது என்பவர் கணக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அந்த வங்கி கணக்கில் 84 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வங்கி கணக்கை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்:
இதனிடையே அவர்கள் ஆந்திரா, வேலூர் ஆகிய பகுதிகளில் இதேபோல் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் விஜயாபானு என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி என கூறி பெண் போலீஸ் மகளிடம் 22 நகை அபேஸ் செய்தது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் கடந்த 2007-ம் ஆண்டு சென்னையில் உள்ள புழல் பெண்கள் தனிசிறையில் காவலராக பணியாற்றினார். அப்போது திருட்டு வழக்கில் கைதாகி விஜயாபானு அந்த சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது விஜயாவிடம் அவர், நான் டெல்லியில் சிறப்பு தொழில் பிரிவில் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருப்பதாகவும், இங்கு சிறையில் நடைபெறும் ஊழலை கண்டயறிவதற்காக திருட்டு வழக்கில் கைதாகி வந்துள்ளதாகவும் கூறி உள்ளார். இதேபோல் அதே சிறையில் பணியாற்றிய விதேச்சனா என்பவரிடமும் விஜயாபானு ஐ.பி.எஸ். அதிகாரி என கூறினார்.
இதனிடையே கடந்த 2010-ம் ஆண்டு விஜயா, விதேச்சனா ஆகியோர் வேலூர் சிறைக்கு பணி இடமாறுதலாகி வந்தனர். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த விஜயாபானு வேலூரில் உள்ள அவர்களது வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி விஜயா வீட்டுக்கு விஜயாபானுவும், அவரது உதவியாளர் வெங்கடேசன் உள்பட 3 பேர் வந்தனர். அப்போது வீட்டில் காவலர் விஜயாவின் மகள் மட்டும் தனியாக இருந்தார். அவரிடம் விஜயபானு நான் சி.எம்.சி.யில் மேம்பாலம் கட்டுவதற்கு காண்டிராக் எடுத்துள்ளேன், அதற்கு பணம் குறைகிறது. எனவே உங்கள் வீட்டில் இருக்கும் நகைகளை கொடு, 2 நாட்களில் தருகிறேன் என்று கூறினார். மேலும் உனக்கு அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் நிரந்த பணி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பி அவர் வீட்டில் இருந்த 22 பவுன் நகையை கொடுத்தார். பின்னர் நகைகளை விஜயாபானு கொடுக்கவில்லை. இந்த மோசடி குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அவரை போன்று பலரிடம் விஜயாபானு ஐ.பி.எஸ். அதிகாரி என கூறி பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். எனவே இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று காவல்துறை தரப்பில் கூறினார்.
புகார் கொடுக்காத மக்கள்:
விஜயாபானு, சேலத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.500 கோடி மோசடி செய்திருக்கும் நிலையில், அவர் நம்பிக்கையானவர் சிறையில் இருந்து வந்தவுடன் பணத்தை திரும்ப தந்து விடுவார் என பொதுமக்கள் நம்பிக்கையோடு உள்ளனர். இதனால் 2000 க்கும் மேற்பட்டவர்கள் ஏமாந்துள்ள நிலையில், 119 பேர் மட்டுமே காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அனைவரும் புகார் அளித்தால் பணத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

