Child Kidnapped: 6 ஆண்டுகளில் 250 பச்சிளம் குழந்தைகள் விற்பனை - பெங்களூருவில் சிக்கிய கும்பல் தந்த பகீர் தகவல்
Child Kidnapped: பெங்களூருவில் கையும், களவுமாக சிக்கிய கும்பல் கடந்த 6 ஆண்டுகளில் 250 பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
Child Kidnapped: குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
பெங்களூருவில் சிக்கிய கும்பல்:
பெங்களூருவில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில், குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24ம் தேதி இரவு ராஜேஸ்வரி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பச்சிளம் குழந்தையை விற்பனை செய்வதற்காக வந்த கும்பல் ஒன்றை மடக்கி பிடித்தனர். அந்த கும்பலில் இருந்த 7 பேரையும் கைது செய்து நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பல ஆண்டுகளாக அவர்கள் குழந்தைகளை கடத்தி பல லட்சங்களுக்கு விற்பனை செய்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.
தீவிரமடைந்த விசாரணை - 3 பேர் கைது:
கைதான நபர்களிடம் விசாரணயை தீவிரப்படுத்திய குற்றப்பிரிவு போலிசார், மருத்துவமனை நடத்தி வரும் போலி மருத்துவரான கெவின் என்பவரை கைது செய்தனர். அதோடு, முருகேஸ்வரி மற்றும் ரம்யா ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதனடிப்படையில், குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த கருத்தரிப்பு மையங்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
6 ஆண்டுகளாக தொடரும் குழந்தை கடத்தல்:
கைது செய்யப்பட்ட கும்பல் பல ஆண்டுகளாக குழந்தையில்லா தம்பதியர்களுக்கு குழந்தைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. கடந்த 6 ஆண்டுகளில் 250க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. 50 முதல் 60 குழந்தைகள் வரை கர்நாடகாவிலும், மீதக் குழந்தைகள் தமிழகத்திலும் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், தற்போது வரை 10 குழந்தைகள் விற்பனை தொடர்பான விவரங்கள் மட்டுமே முழுமையாக காவல்துறைக்கு கிடைத்துள்ளன.
இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, ”ஏழை பெண்கள் கருவை கலைக்க வருவதாக தெரியவந்தால், மருத்துவமனைகள் உதவியுடன் முழுமையான தகவலை அறிந்துகொள்ளும் இந்த கும்பல், அந்த பெண்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அப்போது, மருத்துவ செலவுகளை பார்த்துக் கொள்வதுடன், குழந்தை பெற்ற பிறகு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணத்தை கொடுப்பதாக பேரம் பேசுகின்றனர். அதனை ஏற்கும் பெண்கள் பணத்தை வாங்கிக் கொண்டு பெற்றெடுத்த குழந்தையை கொடுக்க, அந்த சிசுவை குழந்தையில்லா தம்பதியர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதுதவிர ஏழை பெண்களின் கரு முட்டைகளையும் வாங்கி விற்பனை செய்கிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பெண் குற்றவாளி..!
மகாலட்சுமி என்ற பெண் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பெண் 2015-17 காலக்கட்டத்தில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் மாதம் 8,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துள்ளார். அப்போது ஒரு பெண் அவரை அணுகி, கர்ப்பம் தரிக்க முடியாத பெற்றோருக்கு கருமுட்டை தானமாக கொடுத்தால் 20 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளார். இப்படி ஒரே நாளில் பெரிய தொகை கிடைத்ததால், இதையே தொழிலாக மகாலட்சுமி தொடங்கியது தெரியவந்துள்ளது.