திருவண்ணாமலை : நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பலகோடி ரூபாய் முறைகேடு.. மண்டல மேலாளர் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 கோடி ரூபாய் முறைகேடில் ஈடுபட்ட மண்டல மேலாளரை சிபிசிஐடி காவல்துறையினர் கைதுசெய்தனர்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்கின்றது. அதனையொட்டி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு குவின்டால்(100கிலோ) , சன்னரக நெல்(மெலிந்த நெல் ரகம்) 1958 சாதாரண ரகநெல் குவிண்டாலுக்கு 1918 ரூபாய் குவிண்டாலுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் , தனியார் மார்க்கெட்டில் விலையை விட நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு 300 முதல் 400 வரை கூடுதல் விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. எனவே விவசாயிகள் அனைவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பெரிதும் நம்பி செல்கின்றனர். ஆனால் அங்கு இடைதரகர்கள் மூலம் வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதற்கு அதிகாரிகளும் துணை போவதாக விவசாயிகளிடம் இருந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை வேலூர் ,ராணிப்பேட்டை ,ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் இதுபோன்ற முறைகேடுகளும் அதக அளவில் நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
மேலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்து அதனை தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று இடை தரகர்களும் மற்றும் அதிகாரிகளும் லாபம் அடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் நெல் விளைச்சல் குறைவாக உள்ள பகுதிகளில் அதைவிட பல மடங்கு கூடுதலாக நெல் கொள்முதல் எப்படி நடைபெறுகிறது. என்ற கேள்வியும் அதிகாரிகள் மத்தியில் இருந்தது, எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 8.56 கோடி வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு டிஎஸ்பி கவுதமன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 2020 முதல் 2021 வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடந்த முறைகேடுகள் குறித்த ஆவணங்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் கிடைத்ததுள்ளது.
இதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளராக பணிபுரிந்து, தற்போது நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் கோபிநாத் வயது (45) இவரை நேற்று முன்தினம் சிபிசிஐடி காவல்துறையினர் கைதுசெய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வராமல் நேரடியாக குடோனுக்கு அனுப்பப்பட்டதும், அதற்கான தொகையை விவசாயிகளின் பெயரில் வியாபாரிகளுக்கு சென்று சேர்ந்ததும் தெரியவந்துள்ளது. இதனுடைய மதிப்பு சுமார் 10 கோடி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பது என அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த முறைகேடுகளை ஈடுபட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கைதுகள் தொடரும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.