வீடியோ வெளியிட்ட சிறுமி.. திடீர் திருப்பமாக சாமியார் கைது.. ஆடிப்போன காவல்துறை..!
இரண்டு வருடங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரில் சாமியார் கைது.
சமூக வலைத்தளத்தில் வீடியோ
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள, கிராமத்தை சேர்ந்த சிறுமி இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் தன்னை பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தியதாகவும், அதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கல்பாக்கம் அருகே உள்ள கிராமத்தில் தனது தாய் மற்றும் அக்கா ஆகியோருடன் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த அவருடைய, உறவினரான பெரியப்பா மகன் குகன் தினேஷ் என்பவர் அடிக்கடி தன் குடும்பத்துடன் சண்டைபோட்டு வருவதாகவும் , சண்டையில் பொழுது ஒரு கட்டத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அந்த சம்பந்தப்பட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து முதலில் சதுரங்கப்பட்டினம் காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை , இதனை அடுத்து மகாபலிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்களையே மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
பகவான் சாமியார்
வீடியோ பதிவு செய்யப்பட்ட சிறுமி சிறுமியின் அக்கா , மற்றும் அவருடைய அம்மா ஆகியோர் அதே பகுதியில் , " பகவான் ஓம் ஈசன் சேவா அறக்கட்டளை " என்ற பெயரில் குறிசொல்லும் சாமியாராக இருந்து வரும் , வடிவேல் என்பவரின் ஆதரவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்களிடம் கேட்டபொழுது, அது ஒரு மர்ம பங்களா என்றும், குறி கேட்பதற்காக அமாவாசை உள்ளிட்ட நாட்களில் சிலர் வந்து செல்வார்கள் என கூறினார்கள்.
காவல்துறை நடவடிக்கை
வீடியோ வைரலாக பரவி வந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவை தொடர்ந்து டிஎஸ்பி தலைமையில் மீண்டும் மறு விசாரணை நடத்தப்பட்டது. சமூக வலைத்தளத்தில் சம்பந்தப்பட்ட வீடியோ மிக வைரலாக பரவி வந்த நிலையில் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து 3 பேர் மீது, 294B, 223, 506 (1), பெண் வன்கொடுமை , போக்சோ பிரிவுகள் 7, 8,11 (1), உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திடீர் திருப்பம்
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், வீடியோ வெளியிட்ட பெண்ணின் அண்ணன் வினோத் என்கிற மகேஷ் குமார் (26) மீது 448, R-W07,06, 5MJ, 294 B,506 (1) போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு
மகேஷ் குமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புகார் கொடுத்த சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வர நியாயம் கேட்டு, சாமியார் வடிவேலின், பகவான் ஓம் ஈசன் சேவா அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் தங்கியிருந்த மகேஷ்குமாரிடம் பேச முயன்ற பொழுது வடிவேல் பெண்ணின் தாயைத் தாக்கியது மட்டும் இல்லாமல், என்னை மீறி, " என் தம்பி மகேஷ் மேல் கை வைக்க முடியாது" என மிரட்டியுள்ளார். புகாரின் அடிப்படையில் வடிவேல் மீது பெண் வன்கொடுமை, மிரட்டல் விடுத்தது, உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை செங்கல்பட்டு அருகே வைத்து கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மனைவியின் அண்ணனை கடத்திய சாமியார்
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, " பாதிக்கப்பட்ட சிறுமி தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்ததற்கு ஆதாரமான, 'ஸ்கேன் ரிப்போர்ட்' உள்ளிட்டவற்றை அளித்துள்ளார். அப்பொழுது சம்பந்தப்பட்ட சாமியார் மிரட்டி அதின் காரணமாகவும், வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்பட்டுவிடும் என்பதால் வெளியில் கூறாமல் இருந்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட சாமியார் வடிவேல் தொடர்ந்து அந்த குடும்பத்தை மிரட்டியும் வந்து உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஏற்கனவே சாமியார் வடிவேலு, வேறு மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை திருமணம் செய்வதற்காக சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணனை கடத்தி சென்று, அடித்து உதைத்துள்ளார், இது தொடர்பான வழக்கு சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது , என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மகேஷ்குமார் விரைவில், கைது செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.