பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் மீது புகார் கூறிய சிறுமி - வழக்குப்பதிவு செய்துள்ளதாக எஸ்.பி. அரவிந்தன் பேட்டி
சம்பந்தப்பட்ட வீடியோவில் வரும் சிறுமி 18 வயதுக்குக் கீழ் உள்ளதால், வீடியோவை பகிர்வது சட்டப்படி குற்றம். தற்போது சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோவை பகிர்ந்தவர்களின், பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் தன்னை பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தியதாகவும், அதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கல்பாக்கம் அருகே உள்ள கிராமத்தில் தனது தாய் மற்றும் அக்கா ஆகியோருடன் அந்த 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த அவருடைய உறவினரான பெரியப்பா மகன் குகன் தினேஷ் என்பவர் அடிக்கடி தன் குடும்பத்துடன் சண்டைபோட்டு வருவதாகவும் ஒரு கட்டத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அந்த சம்பந்தப்பட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட குகன் தினேஷ், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முதலில் சதுரங்கப்பட்டினம் காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை இதனை அடுத்து மகாபலிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்களையே மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் அந்த ஊரில் இருக்கும் அனைத்து நபர்களும் சம்பந்தப்பட்ட குகன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பரான எல்லப்பன் ஆகிய இருவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், சொல்வதைக் கேட்கவில்லை என்றால் தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவை தொடர்ந்து டிஎஸ்பி தலைமையில் மீண்டும் மறு விசாரணை நடத்தப்பட்டது. சமூக வலைத்தளத்தில் சம்பந்தப்பட்ட வீடியோ மிக வைரலாக பரவி வந்த நிலையில் இன்று, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், தற்பொழுது சம்பந்தமாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தினேஷ் குகன் , எல்லப்பன் மற்றும் கோபால கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது, 294B,223,506 (1), பெண் வன்கொடுமை , போக்சோ 7, 8,11 (1), உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், வீடியோ வெளியிட்ட பெண்ணின் அண்ணன் மீதும் 448, R-W07,06, 5MJ, 294 B,506 (1) போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் தகவல்.
காவலர் மீது விசாரணை
நடவடிக்கை எடுப்பதற்கு தாமதம் ஏன் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதலில் அந்தப் பெண் பதிவு செய்த வீடியோவில் முகாந்திரம் இல்லை என்றும், அதன் பிறகு செய்த வீடியோவில் முகாந்திரம் இருப்பதால் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மேலும் சம்பந்தப்பட்ட சிறுமி, பெண் காவலர் ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பெண் காவலர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு , தவறு இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
வீடியோவை பகிராதீர்கள்
சம்பந்தப்பட்ட வீடியோவில் வரும் சிறுமி 18 வயதுக்குக் கீழ் உள்ளதால், வீடியோவை பகிர்வது சட்டப்படி குற்றம். தற்போது சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோவை பகிர்ந்தவர்களின், பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பார்த்தால், யாரும் பகிர வேண்டாம் எனவும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோரிக்கை வைத்தார்.