2.33 கோடி மதிப்புடைய ஆயிரம் காரட் வைர கற்கள் பறிமுதல்! விமான நிலையத்தை குலுக்கிய கடத்தல்!
1004 காரட் வைரக்கற்களை, பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த கடத்தல் ஆசாமியை கைது செய்து மேலும் விசாரணை.
சென்னையில் இருந்து விமானத்தில், தாய்லாந்து நாட்டிற்கு கடத்த முயன்ற, அபூர்வ வகை உயர் ரக வைரக் கற்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ 2.33 கோடி மதிப்புடைய 1004 காரட் வைரக்கற்களை, பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த கடத்தல் ஆசாமியை கைது செய்து மேலும் விசாரணை.
சென்னை (Chennai News ) சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு, விமானம் மூலம் பெருமளவு வைரக் கற்கள் கடத்தி கொண்டு செல்லப்படுவதாக, சென்னை தியாகராய நகரில் உள்ள, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு, கடந்த 7ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது
மத்திய வருவாய் புலனாய்வு துறை
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை பிரிவினர், ஏழாம் தேதி இரவில் இருந்தே, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் முகாமிட்டு ரகசியமாக, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு, சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கிற்கு செல்லும், தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த, சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலா பயணியாக, தாய்லாந்து நாட்டிற்கு செல்ல வந்தார். அவர் மீது மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவர் வைத்திருந்த கைப்பயை திறந்து பார்த்து சோதனை செய்தனர்.
அந்தக் கைப்பைக்குள் இருந்த பார்சல்களில், புத்தம் புதிய வைரக் கற்கள் மின்னிக் கொண்டு இருந்தன. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், அந்த பயணியின் விமான பயணத்தை ரத்து செய்தனர். அவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்று, முழுமையாக பரிசோதித்தனர். அவருடைய கைப்பை மற்றும் அவர் அணிந்திருந்த உள்ளாடைகள் ஆகியவற்றுக்குள், விலை உயர்ந்த, உயர்ரக வைரக் கற்கள் பெரும் அளவு பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
1004 காரட் வைரக் கற்கள்
அவரிடம் இருந்து 1004 காரட் வைரக் கற்களை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.33 கோடி. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், வைரக்கற்களை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற அந்த ஆண் பயணியை கைது செய்து, சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு அழைத்து சென்று, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வைரக்கற்கள் கடத்தலில், இவருடைய பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? இவரிடம் இந்த வைர கற்களை கொடுத்தது யார்? இவர் தாய்லாந்து நாட்டில் யாரிடம் இந்த வைரக் கற்களை கொடுக்க எடுத்து செல்கிறார்? இதற்கு முன்னால் இதைப்போல் வைர கற்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா? இதற்குப் பின்னணியில் உள்ள கும்பல் தகவல் என்ன? என்று பல்வேறு கோணங்களில் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.