இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்: தங்கத்துக்கு நிகரான பீடி இலை
வாகனத்தில் 30 கிலோ எடையுள்ள ஏழு சாக்கு மூட்டைகளில் பீடி இலைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
![இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்: தங்கத்துக்கு நிகரான பீடி இலை Ramanathapuram crime 2 tons of beedi leaf bundles to be smuggled to Sri Lanka were seized - TNN இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்: தங்கத்துக்கு நிகரான பீடி இலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/21/17b268b19024b0f2192bee35ece89bca1711019083482113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பீடி சுற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் இலை இந்தியாவில் மத்திய பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே பயிரிடப்படுவதால் அங்கிருந்து மலிவாக கிடைக்கிறது. பீடியின் உள்ளே வைக்கப்படும் புகையிலை கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கிடைக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் 'சீலா மீன்பாடு' என்ற கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 2 டன் எடை கொண்ட பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்ததுடன், சரக்கு வாகனத்தில் வந்து தப்பியோடியவர்கள் குறித்துஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் மரைன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இங்கு விலை குறைந்து இலங்கையில் நல்ல விலைக்கு விற்கப்படும் பொருள்களில் ஒன்றாக இந்தியாவின் பீடியும் இருக்கிறது. எனவே பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் இந்திய உணவு பொருள்கள் மருந்து பொருட்களுக்கு மட்டுமின்றி, புகையிலை பொருள்களுக்கும் படு கிராக்கி உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கடத்தல் காரர்கள் இங்கிருந்து மலிவாக கிடைக்கும் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி இலங்கைக்கு கடத்தி, அதெற்கு மாறாக அங்கிருந்து தங்க கட்டிகளை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இலங்கையை ஒட்டியுள்ள ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து தினந்தோறும் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்திய கடலோர படையும் தமிழக கடலோர காவல் படையும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தாலும் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி கடத்தல் காரர்கள் ஹீரோவாகவே இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், வாலிநோக்கம் கடலோரத்தில் சரக்கு வாகனத்தில் இலங்கைக்கு கடத்த கொண்டு செல்லப்பட்ட இரண்டு டன் பீடி இலைகளை குற்றப்புலனாய்வு போலீசாருடன் இணைந்து கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வேதாளை, தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள், தடைசெய்யப்பட்ட பொருட்கள், இங்கு குறைந்த விலையிலும், அங்கு அதிக விலையில் விற்கப்படும் பொருட்கள் அனைத்தும் சட்டவிரோத கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஏர்வாடி பகுதியை ஒட்டியுள்ள வாலிநோக்கம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இந்தத் தகவலை அடுத்து அங்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கடலோரத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது அந்த வாகனத்தில் 30 கிலோ எடையுள்ள ஏழு சாக்கு மூட்டைகளில் பீடி இலைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. உடனே அவைகளை கைப்பற்றிய அதிகாரிகள் இது தொடர்பாக இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது. இந்த பீடி இலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி சென்ற குற்றவாளிகள் யார் என, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)