(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: ‛சார்... ஜெயில் வந்திருச்சு...’ எழுப்பிய போலீஸ்... அசந்து உறங்கிய ராஜேந்திரபாலாஜி... சிறை வாசலில் திக் திக் திக்!
மிகவும் சோர்வாகவும், வலுவிழந்தும் காணப்பட்ட ராஜேந்திரபாலாஜி, வழக்கமான நடை, உடையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்பட்டார்.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பெற்று மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். எந்நேரமும் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர் மாயமானார். கிட்டத்தட்ட 20 நாட்கள் தீவிரமாக ராஜேந்திரபாலாஜியை போலீசார் தேடினார்.
கடல்வழியாக , மாவட்டத்தை தாண்டி, மாநிலத்தை தாண்டியெல்லாம் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. ஒரு கட்டத்தில் தனக்கு முன் ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது. அதன் பின் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இதெல்லாம் ஒருபுறம் நடந்தாலும், அவர் பற்றி தகவல் புதிராகவே இருந்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் அவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் , அவரை சேஸ் செய்து பிடித்த போலீசார், நேற்று நள்ளிரவில் விருதுநகர் அழைத்து வந்தனர். விடிய விடிய உறக்கமின்றி அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற ஜாமின் மனு குறித்து எடுத்துரைத்து அவருக்கு ஜாமின் கேட்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தனக்கு ஏ கிளாஸ் அறை வழங்குமாறு ராஜேந்திரபாலாஜி வைத்த கோரிக்கை ஏற்கப்பட்ட, அவரை மதுரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், போலீசார் அவரை அலைக்கழிக்கும் விதமாக திருச்சி சிறைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். நேற்றிலிருந்து ஒரே ஆடையை மட்டுமே அணிந்திருந்த அவர், வழக்கமான தனது வேட்டி, சட்டை உடைக்கு மாறினார். பின்னர் போலீஸ் வாகனத்தில் ராஜேந்திரபாலாஜி அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் உறக்கம், ஓய்வு இல்லாத நிலையில், சிறை வாசலுக்கு வாகனம் வந்து, ராஜேந்திரபாலாஜி அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு அவரை வீடியோ எடுத்த போதும், அதை கூட அவரால் உணர முடியவில்லை. அந்த அளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர், ‛சார்... இடம் வந்திருச்சு இறங்குங்க...’ என்றார். திடீரென விழித்த ராஜேந்திரபாலாஜி, தன்னைச் சுற்றி கேமராக்கள் சூழ்ந்திருந்ததை சுற்றி சுற்றி பார்த்தார். அவர் எந்த ரியாக்ஷனும் தராமல், அனைவரையும் பார்த்து வணங்கினார். சிரித்தபடி அவர்கள் ஏதோ கேட்க வந்ததை கூர்ந்து கவனித்தார். ‛சார்... உங்களை கைது பண்ணியதை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது... அதை பற்றி என்ன சொல்றீங்க...’ என செய்தியாளர் ஒருவர் கேட்க, கூண்டு அடைத்த போலீஸ் வாகனம் உள்ளே இருந்த ராஜேந்திரபாலாஜி, சிரித்தபடி எதுவும் கூறாமல், கையை அசைத்துவிட்டு புறப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் வாகனத்திலிருந்து இறங்கிய அவர், சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதோ அந்த வீடியோ...
மிகவும் சோர்வாகவும், வலுவிழந்தும் காணப்பட்ட ராஜேந்திரபாலாஜி, வழக்கமான நடை, உடையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்