Radhe Ma | லோக்கல் அன்னபூரணி இப்படி.. இது வடநாட்டு அன்னபூரணி.. “ராதே மா” கதை தெரியுமா?
இணையத்தை இரண்டு மூன்று நாட்களாக அலறவிட்டுக் கொண்டிருக்கும் அன்னபூரணிக்கு நாம் சற்று ஓய்வு கொடுப்போம். இப்போது ராதே மாவைப் பற்றி பேசுவோம்.
இணையத்தை இரண்டு மூன்று நாட்களாக அலறவிட்டுக் கொண்டிருக்கும் அன்னபூரணிக்கு நாம் சற்று ஓய்வு கொடுப்போம். இப்போது ராதே மாவைப் பற்றி பேசுவோம்.
அப்படி என்ன திடீர் பரபரப்பு எனக் கேட்கிறீர்களா? தன்னைத் தானே சாமியாராக அறிவித்துக் கொண்ட ராதே மா போன்றோர் தான் அன்னபூரணி போன்றோருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அந்த பின்புலத்தை அறியவே ராதே மாவை நாம் இன்று அறியப் போகிறோம். அவரின் இயற்பெயர் சுக்வீந்தர் கவுர். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள டோரங்கலா கிராமம் தான் இவரது சொந்த ஊர். இவருக்கு நடந்தது என்னவோ குழந்தைத் திருமணம் என்று தான் சொல்ல வேண்டும். 17 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். 20 வயதை எட்டியபோது இரண்டு குழந்தைகளின் தாயானார். வீட்டுச் செலவுக்கு திண்டாடி வந்த அவர் டெய்லர் வேலை செய்து செலவுகளை சமாளித்து வந்தார். இப்படியே மெஷினும் குடும்பமுமாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அப்போது அவர் மஹந்த் ராம் தீன் தாஸ் என்ற சாமியாரின் அறிமுகத்தைப் பெற்றார். 23 வயதில் அவர், மஹந்த் ராம் தீன் தாஸின் தொண்டரானார். பரம்ஹன்ஸ் தேராவில் ஐக்கியமானார். மஹந்த் ராம் தீன் தாஸ் தான் சுக்வீந்தர் கவுருக்கு ராதே மா என்று நாமகரணம் செய்தார்.
பயணம் தொடங்கியது:
புதிய பெயர் கிடைத்தவுடனேயே ராதே மாவின் புதிய பயணமும் தொடங்கியது. தனது வாழ்க்கை பற்றி ராதே மா ஒரு முறை பேட்டியளித்தார். அப்போது அவர் எனது சிறு வயதில் என் தந்தை என்னை மிகவும் அன்பு செலுத்தி வளர்த்தார். நான் செல்லப் பிள்ளையாக வளர்ந்ததை என் மொத்த ஊரும் அறியும். எனக்கு தந்தை திருமணம் செய்து வைத்தார். திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. கணவர் வெளிநாடு சென்றார். நான் அவரிடம் என்னைவிட்டுச் செல்ல வேண்டாம் என்று கெஞ்சிக் கூத்தாடினேன். அவர் என்னைப் பிரிந்தார். அதன் பின்னர் நான் மிகவும் சிரமப்பட்டேன். பல வேலைகளைப் பார்த்தேன். ஆன்மீகத்தில் ஈடுபட்ட பின்னர் தான் என் வாழ்வில் ஒளி பிறந்தது என்றார்.
ராதே மாவும் சர்ச்சைகளும்:
கடந்த 2015 ஆம் ஆண்டு ராதே மா மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் அவுரங்காபாத்தில் இருந்து மும்பை சென்றபோது கையில் திரிசூலத்துடன் விமானத்தில் ஏறினார். சிவில் விமானப் போக்குவரத்து சட்டத்தின்படி திரிசூலம் போன்ற ஆயுதங்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. ஆனால் திரிசூலத்தை எடுத்துச் சென்று தகராறில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார். பிக் பாஸ் வீட்டிற்குச் சென்ற ராதே மா போட்டியாளர் டாலி பிந்த்ராவால் பாலியல் புகாருக்கு உள்ளாக்கப்பட்டார். இவ்வாறாக ராதே மா மீதான புகார்கள் ஏராளம், தாராளம்.
எப்போதும் சிவப்பு நிற சேலையில், பக்தி கோலத்தில் காட்சியளிக்கும் ராதே மா, செக்ஸியான உடையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இது ராதே மாவை தோலுரித்தக் காட்ட உதவியது. அதன் பின்னர் ராதே மாவின் மார்க்கெட்டிங் சாமியார்கள் உலகில் எடுபடவில்லை.