கடலில் செல்ஃபி எடுத்துக் கொண்டே குளியல்; ராட்சத அலையில் சிக்கி இளைஞர் பரிதாப பலி
புதுவைக்கு சுற்றுலா வந்த ஐதராபாத் வாலிபர் நாகராலா சாய் சாகர் ஆரோவில் கடலில் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார்.
புதுவைக்கு சுற்றுலா வந்த ஐதராபாத் வாலிபர் நாகராலா சாய் சாகர் ஆரோவில் கடலில் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத், ரங்காரெட்டி வெங்கடேஸ்வரா நபரை சேர்ந்தவர் நாகராலா சாய் சாகர் (வயது 22). பி.டெக்., 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். பல்வேறு சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை கோட்டக்குப்பம் அருகே உள்ள தந்திராயன்குப்பம் கடலில் குளித்தனர். உற்சாக மிகுதியில் நாகராலா சாய் சாகர், செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டே கடலில் இறங்கி குளித்தார்.
அப்போது எழுந்த ராட்சத அலையில் அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள், உடனே கடலில் குதித்து, மயங்கிய நிலையில் இருந்த நாகராலா சாய் சாகரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குறிப்பாக தந்திராயன் குப்பம் கடலில் அதிக அளவிலான சுழல் அலைகள் வருவது வழக்கம், இதனால் கடலில் குளிப்பவர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க பாதுகாப்புப் பணியில் காவலர்களை நியமிக்காதது தான் காரணம் என பொது மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்