புதுச்சேரி: லவ் டார்ச்சர்! கையில் கத்தி! காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை வெட்டிக்கொன்ற இளைஞர்!
புதுச்சேரி: திருபுவனை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி: திருபுவனை அருகே காதலிக்க மறுத்த கல்லுாரி மாணவியை வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி திருபுவனை அடுத்த சன்னியாசிக் குப்பம் காலனி மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர் அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேல் என்பவரது தங்கை மயில் என்பவரை கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், மயில் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார்.
இதையடுத்து நாகராஜன், அம்பிகா என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூன்றாவது மகள் கீர்த்தனா(18), கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள அரசு கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரை, நாகராஜனின் முதல் மனைவியான, இறந்த மயிலின் தம்பி ரத்தினவேல் மகன் முகேஷ், 22, ஒருதலையாக காதலித்து வந்தார். மது, புகை, கஞ்சா பழக்கம் மட்டுமின்றி, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் முகேஷ் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதை அறிந்த கீர்த்தனா, முகேஷிடம் பேசுவதை தவிர்த்தார். கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் கீர்த்தனாவை, முகேஷ் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று, காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார்.
அதற்கு கீர்த்தனா மறுப்பு தெரிவித்ததால், அடிக்கடி தகராறு செய்து, என்னைத் தவிர வேறு யாரிடமாவது பேசினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து வந்த மாணவி கீர்த்தனாவிடம், 'என்னை காதலிக்கிறேன் என்று சொல்லா விட்டால், கொலை செய்துவிடுவேன்' என்று மிரட்டினார். கீர்த்தனா அதை பொருட்படுத்தாமல் பேருந்தில் வீட்டிற்கு புறப்பட்டார். மாலை 5 மணியளவில் சன்னியாசிக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
பின்னால் வந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கீர்த்தனாவின் கழுத்து மற்றும் கை, கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் ஓடி வந்ததால், முகேஷ் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். கிராம மக்கள் கீர்த்தனாவை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்த புகாரின்பேரில், திருபுவனை காவல் ஆய்வாளர் ராஜ்குமார், உதவி காவல்ஆய்வாளர் குமாரவேல் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, தப்பி ஓடிய முகேஷை தேடி வருகின்றனர். மாணவி கொலை வழக்கில் தேடப்படும் முகேஷ் மீது, ஏற்கனவே திருவண்டார் கோயில் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.