மனைவியின் பிரிவை தாங்காத கணவர்; நினைவு நாளில் எடுத்த விபரீத முடிவு..!
நல்லம்பள்ளி அருகே மனைவியின் நினைவு நாளில் அவர் பிரிவை தாங்க முடியாத காவலர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை.
நல்லம்பள்ளி அருகே மனைவியின் நினைவு நாளில் அவர் பிரிவை தாங்க முடியாத காவலர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அருகே உள்ள வாடமங்கலம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன்(55) என்பவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். காவலர் மகேஸ்வரனுக்கு இரண்டு மனைவிகள் மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் முதல் மனைவி முனியம்மாளுக்கு ஒரு ஆண் (விஜய்) குழந்தையும் இரண்டாவது மனைவி இந்திராகாந்திக்கு ஒரு ஆண் குழந்தை (சுந்தரேசன்) ஒரு பெண் குழந்தை (இனிதா ) உள்ளனர். இதில் முதல் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடமங்கலத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மகேஸ்வரன் தன் மனைவியை அடித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார். முதல் மனைவியின் நினைவு நாளான கடந்த 11.8.22 அன்று காலை முதலே மனம் உடைந்த நிலையில் மனைவியின் நினைவாக அழுது கொண்டிருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். அதனை அடுத்து நேற்று இரவு நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துள்ளார். அதிகாலையில் அவ்வழியாக சென்றவர்கள் தொப்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தின் அருகே கடிதம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அந்த கடித்தத்தில், தன் மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் என் மனைவியின் உயிர் பிரிந்ததற்கு நான் தான் காரணம் என்பதால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. மேலும் தன்னுடைய மகன் விஜய்க்கு நீ என்னை மன்னித்துவிடு உனக்கு நிறைய கஷ்டங்களை கொடுத்து விட்டேன். இனியும் நீ இங்கு இருக்க வேண்டாம் நீ உன் தாத்தா பாட்டி இருக்கும் இடத்திற்கு சென்று விடு மேலும் உன் மாமாவிடம் பணம் கொடுத்து உள்ளேன் அதை வாங்கி என் இறுதிச் சடங்கை முடித்து விடவும் என்று தன் மகனுக்கும் உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் இது நானாக எடுத்துக் கொண்ட முடிவு என் மரணத்திற்கும் மற்ற யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என காவல் துறைக்கும் எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து தொப்பூர் காவல் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..?
கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்