மயிலாடுதுறை கோயிலில் இருசக்கர வாகன திருடன் கைது! 5 பைக்குகள் மீட்பு: அதிர்ச்சியில் பக்தர்கள்!
மயிலாடுதுறையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 5 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்திற்கு வந்த பக்தரின் இருசக்கர வாகனத்தைத் திருடிய நபரை, மயிலாடுதுறை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கைது செய்தனர். அவரிடமிருந்து திருட்டுப் போன ஐந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் குற்றவாளியைப் பிடித்த மயிலாடுதுறை ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அவரது குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், வெகுவாகப் பாராட்டினார்.
தொடரும் வாகன திருட்டுகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் காணமால் போவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் இது தொடர்பாக ஏராளமான புகார்கள் காவல்நிலையத்தில் பதிவாகி வருகின்றனர். இதனை அடுத்து இருசக்கர வாகனங்கள் காணமால் போகும் இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் இதுபோன்று வாகன திருட்டு சம்பவங்கள் தொடராத வண்ணம் நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர்.
கோயில் வாசலில் அரங்கேறிய திருட்டு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை லலிதா பரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் 25 வயதான சுமன் சங்கர். இவர் கடந்த ஆகஸ்ட் 23, 2025 அன்று மாலை மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய தனது TVS Scooty Pep (TN 82 F 9025) என்ற இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். ஆலயத்தின் அருகே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, தரிசனம் முடித்து திரும்பி வந்தபோது, தனது இருசக்கர வாகனம் அங்கு இல்லை, வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையின் விரைவான நடவடிக்கை
வாகனம் திருட்டு சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்டதும், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, திருட்டுச் சம்பவம் குறித்து பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் கடலூர் மாவட்டம், குமராட்சி, தெற்கு மாங்குடி கத்திரிமேடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 55 வயதான செல்வம் என்பது தெரிய வந்தது.
குற்றவாளி கைது: ஐந்து வாகனங்கள் மீட்பு
இதனை அடுத்து காவல்துறையினர், திருட்டில் ஈடுபட்ட செல்வம் என்பவரை உடனடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து முதலில் காணாமல் போன TVS Scooty Pep வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விசாரணையின்போது, அவரிடம் இருந்து கூடுதலாக நான்கு TVS XL ரக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட செல்வம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசாரை பாராட்டிய எஸ்பி
வழக்கின் விசாரணை மற்றும் குற்றவாளியைக் கைது செய்ததில் சிறப்பாகச் செயல்பட்ட மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அவரது குழுவினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின், வெகுவாகப் பாராட்டினார். பொதுமக்கள் தங்கள் வாகனங்களை முறையாகப் பூட்டி பாதுகாப்பாக வைக்குமாறும், சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





















