கோவில்பட்டி: வீட்டு பீரோவில் இருந்த 8 தோட்டக்கள்: விசாரணை வளையத்தில் சிக்கிய பெண்கள்
கொடுக்கல்,வாங்கல் பிரச்சினை இருப்பதால் ஆனந்தவள்ளியை மாட்டிட விட வேண்டும் என்று குட்டி செய்ததரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாச நகரில் ஆனந்தவள்ளி என்ற பெண்மணி வீட்டில் உள்ள பீரோவில் சந்தேகத்துக்கிடமான முறையில் வைக்கப்பட்டிருந்த 8 தோட்டாக்களை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆனந்தவள்ளி, குட்டி என்ற 2 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொடுக்கல் வாங்கல் பிரச்சினை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாசன் நகரைச் சேர்ந்த அழகு பாண்டி என்பவரது மனைவி ஆனந்தவள்ளி. அழகுபாண்டி இறந்து விட ஆனந்தவள்ளி தனது மகன் பன்னீர்செல்வத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த குட்டி என்ற பெண்மணியும் ஆனந்தவள்ளியும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. குறைந்த வட்டிக்கு குட்டி பணம் வாங்கி அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். அந்த வகையில் ஆனந்தவள்ளிக்கும் குட்டி பணம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் பணம் கொடுக்கல், வாங்கலில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தனக்கு வட்டியுடன் சேர்த்து 16 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று குட்டி கேட்டுள்ளார். தான் வாங்கியது 3 லட்சத்து 50 ஆயிரம் தான். அது மட்டும் தான் தருவேன் என்று ஆனந்தவள்ளி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆனந்தவள்ளி வீட்டினை குட்டி பூட்டி சாவியை எடுத்துக்கொண்டது மட்டுமின்றி பணத்தினை கொடுத்தால் தான் சாவியை தருவேன் என்று கூறி ஆனந்தவள்ளியை வெளியேற்றிதாக தெரிகிறது. இதையெடுத்து ஆனந்த வள்ளி ராஜபாளையத்தில் வேலை பார்த்து வரும் தனது மகன் பன்னீர் செல்வத்தினை பார்க்க சென்றது மட்டுமின்றி அங்கேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில் குட்டி, ஆனந்த வள்ளி வீட்டிற்கு சென்று அங்குள்ள பீரோவை திறந்து பார்த்த போது, அதில் ஒரு சிகரெட் அட்டையில் 8 துப்பாக்கி தோட்டக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையெடுத்து குட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று 8 தோட்டக்களை கைப்பற்றி குட்டியிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஆனந்தவள்ளியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இறந்து போன தனது கணவர் இந்த தோட்டக்களை வைத்திருந்தாகவும், 10 வருடத்திற்கு மேல் தனது வீட்டில் தோட்டக்கள் இருப்பதாகவும், இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்ற ஆனந்தவள்ளி தெரிவித்துள்ளார்.
ஆனந்தவள்ளி, குட்டி இருவரும் நண்பர்கள் என்பதால் ஆனந்த வள்ளி வீட்டில் தோட்டக்கள் இருப்பது குட்டிக்கு தெரிந்து இருக்கலாம். கொடுக்கல்,வாங்கல் பிரச்சினை இருப்பதால் ஆனந்தவள்ளியை மாட்டிட விட வேண்டும் என்று குட்டி செய்ததரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.