உஷார் மக்களே! புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: பகுதிநேர வேலை ஆசை காட்டி ரூ.6 லட்சத்துக்கு மேல் மோசடி
புதுச்சேரியில் ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி மோசடி.

புதுச்சேரி: அரியாங்குப்பத்தை சேர்ந்தவரை, வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி மோசடி நடந்துள்ளது.
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி
புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்தவரை, வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதை நம்பி, மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 4 லட்சத்து 95 ஆயிரம் முதலீடு செய்துள்ளார்.
பின், அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது . இதேபோல், உழவர்கரையை சேர்ந்தவர் ரூ.80 ஆயிரம், நைனார்மண்டலத்தை சேர்ந்தவர் ரூ.50 ஆயிரம் என மொத்தம் 3 பேர் மோசடி கும்பலிடம் 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர்.
இதேபோல் கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவரிடம் அவர் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு மூலம் ரூ. 2.49 ஆயிரத்தை ஆன்லைன் கும்பல் ஏமாற்றியுள்ளனர். அதே போல் சொக்கநாதன் பேட்டைச் சேர்ந்த ஒருவரிடம் ஏ 4 ஷீட் குறைந்த விலையில் தருவதாகவும், அதற்கு ரூ. 56 ஆயிரம் கட்ட வேண்டும் எனக் கூறி ஆன்லைன் மூலம் ஏமாற்றியுள்ளனர். லாஸ்பேட்டையை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்ட நபர் தட்டச்சு வேலை வாங்கி தருவதாக கூறி, அதற்கு செயலாக்க கட்டணமாக ரூ.2.97 ஆயிரம் பெற்று ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகார்களின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
போலீசாரின் எச்சரிக்கை மற்றும் அறிவுரை
புதுச்சேரி இணைய வழி போலீசார், “இணையத்தில் ஏதேனும் பொருளை வாங்கும் முன்பும் அதன் உண்மைத்தன்மையை நன்கு ஆராய்ந்து, விற்பவரின் முழுமையான விபரங்களையும் சரிபார்த்து பார்த்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தோன்றும் கவர்ச்சியான விளம்பரங்களை உடனடியாக நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக புகார் அளித்தால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாகும் என்பதால், எந்த குற்றச்சம்பவத்தையும் மறைக்காமல் உடனடியாக தகவல் தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எங்கே, எப்படி புகார் அளிப்பது?
இணைய குற்றச்செயல்களுக்கு உள்ளானால் அல்லது சந்தேகத்துக்கிடமான எந்த தகவலையாவது காணும்போது, பொதுமக்கள் பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்:
- தேசிய அளவிலான இலவச உதவி எண்: 1930
- புதுச்சேரி சைபர் செல் எண்கள்: 0413-2276144 / 9489205246
- மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in
- இணைய தளம்: www.cybercrime.gov.in
விழிப்புணர்வே பாதுகாப்பு
ஆன்லைன் உலகில் அதிகரித்து வரும் போலி விளம்பரங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் தங்களுக்குள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது தான் மிகச் சிறந்த பாதுகாப்பு. குறிப்பாக பண்டிகை நாட்களில் வரும் சலுகை விளம்பரங்களைப் பார்த்து உடனடியாக நம்பாமல் சற்று ஆராய்ச்சி செய்தால், பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.




















