கோடநாடு வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்சாமி, மனோஜ்சாமியிடம் இரண்டாவது நாளாக விசாரணை.!
’’மேலும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, ஜித்தின் ஜாய் ஆகியோரை நாளை விசாரணைக்கு ஆஜாராகுமாறு சம்மன்’’
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், இவ்வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். பின்னர் ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன் மற்றும் ஜம்சிர் அலி ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி இரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாகவும் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோரிடமும் நேற்று நீலகிரி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக இருவரிடமும் உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சதீசன் மற்றும் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிஜின்குட்டி ஆகியோரை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு நீலகிரி காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, ஜித்தின் ஜாய் ஆகியோரை நாளை விசாரணைக்கு ஆஜாராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாகவும், இவ்வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், வழக்கில் விசாரணை வேகமெடுத்துள்ளது. அப்போது நீதிமன்றத்தில் காவல் துறையினர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி, ஜித்தின் ஜாய் ஆகியோர் தரப்பு வழக்கறிஞர் விஜயன், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பல்வேறு உண்மைகளை சொல்ல தயாராக உள்ளனர் எனவும், இவ்வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவரும் எனவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.