ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு தந்தை - குழந்தை உயிரிழப்பு - நெல்லையில் சோகம்
உயிரிழந்த இருவரின் உடல்களையும் பார்த்து அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போர் அனைவரையும் கலங்கச் செய்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் மேலமுன்னீர் பள்ளம் அருகே உள்ளது அன்னை நகர். இங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு 2 பேர் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள முன்னீர் பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது வாலிபர் ஒருவரும், குழந்தை ஒன்றும் பிணமாக கிடந்தனர். மேலும் இதுதொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் உயிரிழந்த 2 பேரில் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இருவர் குறித்த தகவல்களை போலீசாரை விசாரணை செய்தனர். விசாரணையில் மேல முன்னீர்பள்ளம் அன்னை நகரை சேர்ந்த சிவா என்ற உச்சிமாகாளி என்றும், 32 வயதான இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார் என்றும் இவருடைய 5 வயது மகன் முத்துசெல்வன் என்பதும் தெரிய வந்ததுள்ளது. மேலும் நேற்று இரவு சிவா தனது 5 வயது குழந்தையை அழைத்துக்கொண்டு அன்னை நகர் ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை பார்க்க சென்றதாக தெரிகிறது. அப்போது தண்டவளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு இருவரும் தூக்கி வீசப்பட்டு இரத்த வெள்ளத்தில் துடிதுடி உயிரிழந்ததாகவும் தெரிகிறது. இருப்பினும் இவர்கள் இறந்த காரணம் விபத்தா? அல்லது தற்கொலையா? என்பது குறித்தும் விசாரணையானது நடைபெற்று வருகிறது. உயிரிழந்த இருவரின் உடல்களையும் பார்த்து அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போர் அனைவரையும் கலங்கச் செய்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்