Crime: நெல்லையில் கொடூரம்... இறைச்சிக்கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை... மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மர்ம நபர்களால் இறைச்சிக்கடைக்காரர் ஆறுமுகம் கொலை செய்யப்பட்ட சம்பவம் முக்கூடல் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ஆறுமுகம் (வயது 70). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் 4 மகள்களும் உள்ளனர். மேலும் இவர் அந்த பகுதியில் பிராய்லர் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஆறுமுகம் கோழிகளை வெட்டிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு முகமூடி அணிந்தவாறு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்துள்ளது. பின் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆறுமுகத்தை தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் முக்கூடல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆறுமுகத்தை மீட்டு முக்கூடல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து முக்கூடல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இதனை அறிந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் மற்றும் அங்குள்ள மக்கள் சாலையில் திரண்டு அறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என நெல்லை - முக்கூடல் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை போலீசார் மாற்று வழியில் அனுப்பினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், டி.எஸ்.பி.க்கள் ராமகிருஷ்ணன் (சேரன்மகாதேவி), சதீஷ்குமார் (அம்பை), வெங்கடேசன் உள்பட 5 டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரவு 12 மணிக்கும் மேல் அவர்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் நெல்லை சரக டி.ஐ.ஜி. பர்வேஷ் குமாரும் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அதேபோல போலீசார் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஆறுமுகம் எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களால் இறைச்சிக்கடைக்காரர் ஆறுமுகம் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் முக்கூடல் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.